ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதை விசாரித்து வந்தனர்.


விசாரணையின் முடிவில் தற்போது அவர் மீது இரு புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயநல்லதம்பி என்பவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியிடம், பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் அவர் கூறியதாகவும், அதன் அடிப்படையில் பலரிடமிருந்து பணம் பெற்று ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும்,  'நான் பலரிடம் வாங்கி கொடுத்த 3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என, விஜயநல்லதம்பி, விருதுநகர் போலீசில் புகார் அளித்தார்.




இந்த புகாரை மறுத்த ராஜேந்திரபாலாஜி, விஜய நல்லதம்பி குறித்து அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அதில், தன் மீது வீண் புகார் தெரிவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியிருந்தார். அது மட்டுமின்றி, தான் நியாயமானவர் என்பது தன்னுடன் இருப்பவர்களுக்கும், தன்னை அறிந்தவர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதற்கிடையில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், தான் கைது செய்யப்படாமல் இருக்க, முன் ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார். 


அதில், ‛அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தததாக விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் தன்  மீது   வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தான் யாரிடமும் நேரடியாக பணம் பெற வில்லை எனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், எனவே தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெறலாம் எனத் தெரிகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண