புதுவை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல ரவுடி லாஸ்பேட்டை அருகே கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற பொடிமாஸ் (வயது 27).  இவர் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீசில் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சரத்குமார் ஓராண்டுக்கு பின் வெளியே வந்துள்ளார். இவருக்கு மங்கையர்க்கரசி (23) என்ற மனைவியும், 9 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர்.




தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் சரத்குமார் ஊருக்குள் நுழைய லாஸ்பேட்டை போலீசார் தடை விதித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெளியூர்களில் அவர் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரத்குமார், அரியாங்குப்பத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தார்.  ஆனால் கணவர் வெங்கடேசனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் லாஸ்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வெங்கடேசன் மட்டும் வீட்டில் இருந்த நிலையில், அவருடன் சரத்குமாரும் தங்கி இருந்தார். அரியாங்குப்பம் (தெற்கு) போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் காவல் நிலையம் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் வெங்கடேசன் வீடு உள்ளது.




இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் இருவரும் வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசன் வீட்டுக்கு வந்து கதவை தட்டியது. தூக்க கலக்கத்தில் இருந்த வெங்கடேசன் கதவை திறந்தார். உடனே அவரை அந்த கும்பல் வெளியே இழுத்து கை, கால்களை கட்டி அங்குள்ள கழிவறையில் போட்டு அடைத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு ஒரு அறையில் படுத்து தூங்கிய சரத்குமாரை அந்த கும்பல் சுற்றிநின்று பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.



இதில் கழுத்து, தலை, முகம், கைகள், இடுப்பு என உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்து போய் இருந்தது. இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரத்குமார் துடிதுடித்து இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த பயங்கர சம்பவம் பற்றி தகவல் அறிந்த புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சரத்குமாரின் உடலை பார்வையிட்டனர்.


பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர கொலை குறித்து வெங்கடேசன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சரத்குமாரை கொலை செய்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிர விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.