சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கின் விசாரணை சூடு பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில், இவர்களில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இருமகன்கள் உள்ள நிலையில் கடந்தாண்டு திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
அதன்பின்னர் ஐஸ்வர்யா சினிமா வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தேனாம்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் லாக்கரில் இருந்த தங்கம், வைர நகைகள் காணவில்லை என ஐஸ்வர்யா போலீசில் புகாரளித்துள்ளார். காணாமல் போன நகைகளின் மதிப்பு 60 சவரன் என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் தனது தங்கை திருமணத்திற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை என்று புகாரில் ஐஸ்வர்யா குறிப்பிட்டிருந்தார். தான் நகைகளை லாக்கரில் வைத்திருப்பது தங்கள் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களுக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஐஸ்வர்யா அளித்த புகைப்படங்கள் அடிப்படையாக கொண்டு பணிப்பெண்கள், கார் ஓட்டுநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் பணிப்பெண் ஈஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது என்றும், இதுவரை 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு மீதமுள்ள நகைகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்ட நகைகளின் அளவை விட அதிகப்படியான நகைகள் மீட்கப்பட்டுள்ளதால், தற்போது விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் உட்படுத்தப்படவுள்ளார். மேலும், அவர் நகை வாங்கிய பில்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.