மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான குற்றபத்திரிகை தகவல்கள் வெளியே கசிந்துள்ளன. குறிப்பாக சுகேஷ் - நடிகை ஜாக்குலின் இடையேயான உறவு குறித்தும், ஜாக்குலினுக்கு சுகேஷ் கொடுத்த பரிசுப்பொருட்கள் குறித்தும் ஒரு லிஸ்டே வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 2020 - ஜனவரி 2021 என்ற ஒரு மாத இடைவெளியில்தான் ஜாக்குலினிடம் சுகேஷ் பழக்கத்தை தொடங்கியுள்ளார்.தொடக்கத்தில் சுகேஷ் யார் எனத் தெரியாததால் ஜாக்குலின் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். பின்னர் ஜாக்குலினின் மேக்கப் ஆர்டிஸ்ட் மூலம் சுகேஷ் காய் நகர்த்தி ஜாக்குலினிடம் அறிமுகம் ஆகியுள்ளார்.
தன்னை சேகர் ரத்னா வேலா என்ற அறிமுகத்துடன் ஜாக்குலிடம் நெருக்கம் காட்டியுள்ளார் சுகேஷ். பின்னர் தன்னுடைய பரிசுப்பொருட்கள் மூலம் ஜாக்குலினை திக்குமுக்காட வைத்துள்ளார். விசாரணையில் ஜாக்குலின் சொன்ன தகவலின்படி, இரண்டு ஜோடி வைர கம்மல்கள், விலை உயர்ந்த ப்ரேஸ்லட், விலை உயர்ந்த 3 கைப்பைகள், ஒரு ஜோடி ஷூ உள்ளிட்டவை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி பிரத்யேக gucci பிராண்ட் ஜிம் உடைகள் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் சுகேஷ் கொடுத்த தகவலின்படி, 15 ஜோடிக்கும் அதிகமான காதணிகள், 5 கைப்பைகள், பல முன்னணி நிறுவனத்திடம் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் கொடுத்தேன் என்றும் சுகேஷ் கூறியுள்ளார்.
ஆபரணங்கள் மட்டுமின்றி ரோலக்ஸ் கடிகாரங்கள் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மொத்தமாக ரூ.7 கோடிக்கு ஆபரணங்கள் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் மினி கூப்பர் கார் ஒன்றையும் கொடுத்ததாகவும், நடிகை அதனை திருப்பி கொடுத்ததாகவும்தகவல் வெளியாகியுள்ளது. பெரிய பெரிய ஷோ ரூம்களுக்கு செல்லும் ஜாக்குலின் அங்கு அவருக்கு பிடித்த பொருட்களை டிக் செய்து சுகேஷுக்கு அனுப்பி வைப்பாராம். அந்த பொருளுக்கு பணம் செலுத்தப்பட்டு நேரடியாக ஜாக்குலிடம் வந்து சேருமாம். இதுவே வழக்கமாகவும் இருந்துள்ளது.
சுகேஷின் கிப்ட் லிஸ்டில் ஜாக்குலின் மட்டுமே அல்ல. ஜாக்குலினின் தாய், சகோதரி, சகோதரரும் கூட இருந்துள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வரும் ஜாக்குலின் சகோதரிக்கு 1.50 லட்சம் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுத்துள்ளார். மேலும் BMW X5 காரையும் பரிசளித்துள்ளார். அதேபோல் ஜாக்குனின் அம்மாவுக்கும் ஜாக்குலின் சகோதரருக்கும் கூட கடன் தொகை, பரிசுப்பொருட்களை சுகேஷ் கொடுத்துள்ளார்.
சன் டியின் ஓனர் என்றும், உயிரிழந்த ஜெயலலிதா குடும்ப உறுப்பினர் என்றும் பல பொய்களை கட்டவிழ்த்தே தன்னிடம் சுகேஷ் அறிமுகம் ஆனதாக ஜாக்குலின் குறிப்பிட்டுள்ளார். நான் உங்களின் பெரிய ரசிகர் என ஜாக்குலினிடம் நெருக்கம் காட்டியுள்ளார் சுகேஷ்.
யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் இரும்புக் கோட்டை என்று அழைத்துவந்த அதிமுக ஆட்டம் கண்டிருந்த காலம் அது. அப்போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்காக போட்டாப் போட்டி நடந்து கொண்டிருந்தது. இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.