திருவாரூர் மாவட்டத்தில் விட்டில் தனியாக இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து, அவரது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பின்னணி என்ன ?


திருவாரூர் மாவட்டம் மேல  பருத்தியூர்  கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி.இவர் பெருநிலக்கிழாராக இருந்து விவசாயம் செய்து வருகிறார்.இவரது மனைவி கண்ணகி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். பருத்தியூரில் உள்ள வீட்டில் நாராயணசாமி மற்றும் அவரது மனைவி கண்ணகி ஆகிய இருவர் மட்டும் வசித்து வருகின்றனர். கண்ணகி எப்பொழுதும் கழுத்தில் ஏராளமான நகைகளை அணிந்திருப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், கண்ணகியின் நடமாட்டத்தை பல நாட்களாக சிலர் நோட்டமிட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் ஏராளமான நகைகள், பணம் இருப்பதை அறிந்துக்கொள்ள கொள்ளையர்கள், சரியான நேரத்திற்காக காத்திருந்தனர்.


வெளியூர் சென்ற கணவர், கொலையான மனைவி


இந்நிலையில் நேற்று மாலை நாராயணசாமி திருவாரூருக்கு ஒரு வேலையாக சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்து பருத்தியூருக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் மனைவி கண்ணகியை காணவில்லை. இதனால் நாராயணசாமி வீட்டிற்கு பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கண்ணகி கொலையாகி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நாராயணசாமி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கண்ணகி கழுத்தறுபட்டு, நகைகள் பறிக்கபப்ட்டு கிடந்தது தெரிய வந்தது. 


கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை


அவர் எப்போதும் கழுத்து முழுவதும் அணிந்திருந்தம் ஒரு நகையை கூட காணவில்லை. யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கண்ணகி தனியாக வீட்டில் இருக்கிறார் என்பதை தெரிந்துக்கொண்டு அவரை கொலை செய்து நகைகளை திருடி உள்ளனர் என்பது தற்போது தெரிய வருகிறது. அவர் அணிந்திருந்த 30 சவரனுதுக்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளை போயிருப்பதாக கண்ணகி தரப்பில்  கூறப்படுகிறது.


சம்பவ இடத்தில் திருவாரூர் எஸ்.பி. விசாரணை


இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் சென்றது பதிவு ஆகியிருக்கிறாதா என்பது குறித்தும்  காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஒரு உள்ளார்ந்த கிராமப்புறத்தில் நகைகளுக்காக பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


காவல்துறை எச்சரிக்கை


வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தங்களை யாரும் நோட்டமிடுவது தெரியவந்தால் உடனடியாக அக்கம், பக்கத்திற்கோ அல்லது காவல்நிலையத்தின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கோ தகவல் கொடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். அதேபோல், வெளியில் செல்லும்போது அளவிற்கு அதிகமாக நகை அணிந்து செல்வது கூட தற்போது ஆபத்து முடிந்துள்ளது. எனவே, கிராமம் என்றாலும் கூட பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.