நடிகர்களின் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் மோசடியில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பி.பி. அக்ரஹாரம் பகுதியில் சாபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன்களான அலாவூதின் மற்றும் வாகித் இருவரும் தமிழ் சினிமா நடிகர் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கியுள்ளனர். அதனைக் கொண்டு காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு கொடுத்துள்ளனர்.
அப்பெண்ணும் அதனை ஏற்று அலாவூதின் மற்றும் வாகித் இருவருடனும் அந்த போலி கணக்கில் பேசி வந்துள்ளார். நாளடைவில் பெண்ணின் வாட்ஸ் அப் நம்பரை பெற்று அதன்மூலம் பேசி வந்துள்ளனர். அப்போது வீடியோ காலில் அந்த பெண் பேசுவதை புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்துள்ளனர். இதனை ஸ்கிரீன்ஷாட் ஆக அனுப்பி அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அவரோ பணம் தர மறுக்கவே, போட்டோக்களை மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளத்தில் பகிரப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்து போன அப்பெண் ரூ.2 லட்சத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார்.
ஆனால் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் அப்பெண் ஆன்லைன் வழியாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம். சுதாகர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன், வாகித் ஆகியோர் என்ற சகோதரர்கள் கூட்டாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் போலீசார் ஈரோடு சென்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மடிக்கணினியையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் நடிகர்களின் படங்களை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அவர்கள் பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கியது தெரிய வந்தது. மேலும் தங்களது வலையில் சிக்கும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களை மிரட்டி பணத்தை பெற்று வந்ததும் விசாரணையில் வெளிவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் மாணவிகள் இதுபோன்று பிரபலங்கள் மற்றும் அறிமுகமில்லாதவர்கலின் பெயரில் இருந்து அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனவும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.