நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 30 ஆம் தேதி இரவு அவர் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜெகன் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து ஜெகனின் உறவினர்கள் மற்றும் பாஜகவினர் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஜெகனின் உடலை வாங்க மாட்டோம். இதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய  வேண்டுமென போராடினர். மேலும் இந்த கொலையானது திமுக பிரமுகர் பிரபு என்பவரின் தூண்டுதலின் பேரில் தான் நடைபெற்றுள்ளது எனக்கூறி அவரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.


இதனிடையே இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை சேர்ந்த விக்கி உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 6 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தால் மட்டுமே உடலை பெறப்போவதாக கூறி உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து ரஞ்சித் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குறிப்பாக கொலையில் தொடர்புடைய திமுக  பிரமுகர் பிரபுவுடன் நெருங்கிய பழக்கம் கொண்ட ரஞ்சித் இந்த கொலை வழக்கில் காவல்துறையினர் தன்னையும் சேர்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.


இந்நிலையில் தேடப்பட்டு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகியும், மண்டல சேர்மனின் கணவனுமான மூளிக்குளம்  பிரபு  நெல்லை மாவட்டத்திலிருந்து வெளியூருக்கு தப்ப முயன்றதாக  கூறப்படுகிறது. அப்போது மாவட்ட எல்லையில் தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை இன்று (04.09.23) பாஜகவினர் இக்கொலையை கண்டித்தும், முக்கிய குற்றவாளியான திமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டதால் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.  பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண