திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி ஏரிக்கரையில், ஆக்கிரமிப்பு செய்து கடை அமைக்கும் வேலைகள் நடப்பதாக துரிஞ்சாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், கிராம உதவியாளர் நெடுஞ்செழியன், செல்வி உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கூரை அமைக்க போடப்பட்டிருந்த மரம் உள்ளிட்டவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த புதுமல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரகுநாதன், சக்திவேல் உள்ளிட்ட இருவரும் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற வருவாய் அலுவலர்களை தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசியதோடு மட்டுமின்றி உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்த பெண் வருவாய் ஆய்வாளர் பேகத்தின் கையை முறித்து செல்போனை உடைத்து  அங்கிருந்து தப்பிச் சென்றனர்.




இவர்கள் தாக்கியதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு கழுத்து மற்றும் வாய் பகுதியில் பலமாக அடிபட்டுள்ளது. மேலும் உதவியாளர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டவர்களையும் உருட்டுக்கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கியுள்ளனர். துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்து தாக்கி தகாத வார்த்தையால் பேசிய ரகுநாதன் மற்றும் சக்திவேல் உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.




இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்கள் தாக்கப்பட்ட உடன் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது. மேலும் அரசு அலுவலர்களை தாக்கியவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .




இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, “நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைக்க முயன்றவர்களை தடுத்த வருவாய் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், மாவட்ட காவல்துறை சார்பில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும்” என எச்சரித்தார்.