பீகாரில் பட்டாக் கத்தியுடன் வகுப்பறைக்குள் நுழைந்த நபர் தன் மகளின் சீருடைக்கான காசைத் தராவிட்டால் விபரீதம் நேரும் என எச்சரித்துச் சென்றுள்ளார்.


பீகார் மாநிலத்தில் உள்ளது அராரியா மாவட்டம். இங்குள்ள அரசுப் பள்ளியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம் சார்பில் சீருடைக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தனது மகளுக்கு பணம் வராததைக் கேட்க பட்டாகத்தியுடன் வந்தார் தந்தை ஒருவர். அவரது பெயர் அக்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் தன் மகளுக்கான சீருடைக்கு உரிய பணத்தைக் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் நாளை மீண்டும் வருவேன் என்று அந்த நபர் எச்சரித்துள்ளார். திடீரென்று மேல்சட்டை கூட இல்லாமல் பட்டாக் கத்தியுடன் ஒரு நபர் வந்து மிரட்டியது பள்ளி ஆசிரியர்களையும் மாணவர்களையும் பீதியில் ஆழ்த்தியது. இதனையடுத்து அக்பர் என்ற அந்த நபர் குறித்து பள்ளி முதல்வர் ஜோகிஹாட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அக்பர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இப்படியும் ஒரு சம்பவம்:
பீகாரில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. மேலே சொன்னது டெரர் ரகம் என்றால் வரப்போகும் செய்தி ஆச்சர்யத்தின் உச்சம். பீகார் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரியில் இந்தி பேராசிரியர் லல்லன் குமார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கல்லூரி விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். ஆனால் அன்று தொட்டு இன்று வரை இவருடைய வகுப்புக்கு மாணவர்கள் யாரும் சரியாக வரவில்லையாம். கொரோனா காலத்தில் கூட ஆன்லைனில் வகுப்பில் 5, 6 பேர் தான் அட்டெண்ட் செய்தார்களாம். இதனால் லல்லன் குமார் மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார்.


இந்த மாதமும் அவருக்கு வழக்கம் போல் சம்பளம் வந்துள்ளது. இனியும் பொறுக்க முடியாது என நினைத்த லல்லன் குமார் தான் வேலையில் சேர்ந்ததில் இருந்து இது வரை பெற்ற 33 மாதங்களுக்கான ரூ.23 லட்சம் பணத்தையும் ஒரே காசோலையாக அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளருக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்து பல்கலைக்கழகமே ஆட்டம் கண்டு போனது. 


விளக்கம் சொன்ன வாத்தியார்!


ஏன் இப்படி செய்தீர்கள் என்று ஊடகங்கள் அவரை எறும்புபோல் மொய்த்துக் கொண்டன. அப்போது அவர் சொன்ன விளக்கமும் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இதுவரை நான் சரிவர வகுப்புகளே எடுக்கவில்லை. என் வேலை வகுப்பெடுப்பது. அதைச் செய்யாமல் நான் எப்படி சம்பளம் வாங்க முடியும். என் மனசாட்சியிடம் கேட்டேன். அது என்ன சொன்னதோ அதையே செய்துள்ளேன். என் மனசாட்சியின் படி நான் வாங்கிய சம்பளத்தை திருப்பி அனுப்பியுள்ளேன். பாடமே எடுக்காமல் இருந்தால் நான் அறிவிழந்து விடுவேன். அதுவும் இறந்துபோவதற்கு சமமானது தான். என் அறிவை நான் இழக்க விரும்பவில்லை என்று கூறினார்.




லல்லன் குமார் கூறியதைக் கேட்டு, கல்லூரிக்கு ஏன் மாணவர்கள் வரவில்லை என்று கல்லூரி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஒரு நாணயத்துக்கு இருபுறம் என்பதுபோல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.