Crime: பீகாரில் பத்திரிகையாளர் ஒருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விமல்குமார் (41). இவர் டைனின் ஜாக்ரன் என்ற பத்திரிகையில் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தார். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ராணிகஞ்ச் பகுதியில் உள்ள பிரேம் நகரில்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டியுள்ளார். இதனை அடுத்து, கதவை திறந்து வெளியே வந்ததும் மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில்  கிடந்த விமல் குமார் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 


இதனை அடுத்து, துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்தனர். அங்கு அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். பின்னர், அவரது மனைவி பதறி அடித்து வெளியே வந்துள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விமல் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 


இதற்கிடையில், சம்பவம் நடந்த உடனேயே, மாவட்டம் முழுவதிலும் இருந்து பத்திரிகையாளர்கள் அராரியாவில் உள்ள சதர் மருத்துவமனையில் அமைந்துள்ள பிரேத பரிசோதனை அறைக்கு அருகில் கூடினர். இந்த சம்பவம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யுமாறு ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 




இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ”பத்திரிகையாளரை  சுட்டுக் கொன்ற மர்ம நபர்களை தேடி வருகிறோம். கடந்த 2019ஆம் ஆண்டு விமல் குமாரின் சசோதரர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விமல் குமார் முக்கிய சாட்சியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த விசாரணையிலும் விமல் குமாரை சாட்சி அளிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே விமல் குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம்” என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 




மேலும் படிக்க 


SBI Survey On Middle Class: நீங்களும் லட்சாதிபதி... எப்போது தெரியுமா? நடுத்தர குடும்பங்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்கும் எஸ்பிஐ - வெளியான ரிப்போர்ட்