பீகாரில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள பள்ளிக்குச் சென்றபோது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.


பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள பள்ளிக்குச் சென்ற 10 வயது மாணவியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


நேற்றைய தினம் நாட்டின் 76வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காத்மண்டு, பிரிட்டன், கத்தார், குவைத், நேபாளம், ஷாங்காய், உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.


அதேபோல் இந்தியாவை பொருத்த வரையிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றிவைத்து குடியரசு தினவிழாவில் மரியாதை செலுத்தினார். உலக நாடுகளும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடிய அதே வேளையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் அவ்வாறு கொண்டாடப்படவில்லை. பதிலாக குடியரசு தின நாள் அந்த சிறுமிக்கு சித்ரவதையாக மாறியுள்ளது.


பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது குடியரசு நாளை கொண்டாட பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அதேப் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவன் சிறுமியை யாருமில்லா நேரம் பார்த்து வழிமறித்து தனது அறைக்கு இழுத்துச்சென்றுள்ளான்.


அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயலும்போது சிறுமி கூக்குரலிட்டு கத்தியுள்ளார். அவர் எவ்வளவு கத்தியும் அவளின் அலறல் சத்தம் மற்றவர்களுக்கு கேட்கவில்லை. வலியால் துடிதுடித்துப்போன சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து குற்றவாளி அங்கிருந்து தப்பிச்சென்றார்.


பின்னர் உயிர் பிழைத்த பெண் தனது வீட்டிற்கு வந்து தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்தார். பின்னர் குடும்பத்தினர் அவளை அராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.


இதுகுறித்து சிறுமியின் உறவினர் ஒருவர் கூறுகையில், “சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று ஆதாரங்களை சேகரித்தது.


பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. சிறுமியை பார்த்துக்கொள்ள நாங்கள் மருத்துவமனையில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.


சதர் துணைப் பிரிவு காவல் அதிகாரி (SDPO) ரஞ்சித் குமார் சிங் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மருத்துவ அறிக்கைக்கு காத்திருக்கிறோம். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிகிறது.  


குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடன் வசிப்பவர் என்று கூறப்படுகிறது. போஸ்கோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.