பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க இளம் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த சம்பவம் நடந்துள்ளது. பீகாரில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. பீகார் மாநிலம் பெகுசாய் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு தற்போது ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விளக்கம்:
நடந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், ஜன் சாதாரண் எக்ஸ்பிரஸ் ரயிலில் அந்த இளம் பெண் பயணித்துள்ளார். அவர் பரோனி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அவர் தனியாக பயணம் செய்வதை நோட்டம் விட்ட இளைஞர் ஒருவர் அப்பெண்ணை பலமுறை தவறாக தொட்டுள்ளார். அவரது தொடுகையால் அந்தப் பெண் ஆத்திரமடைந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த சீண்டல் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. அப்போது அவர் ரயில் சமஸ்திபுர் பரோனி ரயில் பாதையில் கோர்பதா ரயில்வே நிலையம் அருகே சென்றபோது ரயிலில் இருந்து கீழே குதித்தார். அந்தப் பயணியின் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கவே அப்பெண் கீழே குதித்துள்ளார்.
அவர் முசாபர்பூரில் செவிலியர் படிப்பை பயின்று வந்தார். வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது பாலியல் வன்முறைக்கு பயந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரின் கைகள், கால்கள், தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இளம் பெண் வேதனை:
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், "நான் பரோனியில் உள்ள என் வீட்டுக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞன் என்னை ரொம்பவே தொந்தரவு செய்தான். எனது அந்தரப் பாகங்களை அடிக்கடி தொட்டு இம்சித்தான். அவனது துயரம் தாங்க முடியாமலேயே ஓடும் ரயிலில் இருந்து நான் கீழே குதித்தேன். நான் பலமுறை அவரிடம் கெஞ்சிக் கேட்டேன். ஆனாலும் அந்த நபர் என்னை விடவில்லை. ரயில் கதவுக்கு அருகில் சென்று நின்றேன். அப்போதும் அவன் அங்கு வந்து தொந்தரவு செய்ய முயன்றான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. விழுந்துவிட்டேன்" என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே பாதுகாப்புப் படையினர் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவிக்கவில்லை.
டெல்லி நிர்பயா வழக்கிற்குப் பின் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை என்றே தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக குறிப்பேடுகள் சொல்லும் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.