ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு, அவருடைய தோழி அனுப்புவது போல் வாட்ஸ்-அப்பில் வாலிபர் ஒருவர் மெசேஜ் அனுப்பி பேசி வந்துள்ளார். அந்த பெண்ணின் மூலம் அவருடைய மற்ற தோழிகளின் செல்போன் எண்களையும்  பெற்றுக்கொண்ட அந்த நபர், அவர்களிடமும் மற்ற தோழிகளுக்கு அனுப்புவது போல இரவு நேரங்களில் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பழகி வந்துள்ளார். அப்போது சில பெண்கள் தங்களின் குடும்ப கஷ்டங்கள், அந்தரங்க பிரச்சினைகளை வாட்ஸ்-அப் தகவல்களாக தோழிதான்  என நினைத்து அந்த நபரிடம் பகிர்ந்துள்ளனர். மேலும் அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.



தொடர்ந்து தோழியாக பேசி வந்த நிலையில், அந்த நபர் ஒரு பெண்ணிடம் பேசும்போது திருமணமாகி விட்டதா? என்று தகவல் அனுப்பி உள்ளார். ஒரே தெருவில் இருக்கிறோம் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பது உனக்கு தெரியாதா? என்று அந்த பெண் பதில் அனுப்பி கேட்டவுடன்  அந்த பெண் உஷார் அடைந்து விட்டார். மேலும்,  தோழி பெயரில் வரும் வாட்ஸ்-அப் தகவல்கள் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளார். உடனே எந்த தோழி பெயரில் தகவல் வந்ததோ, அவரை தொடர்பு கொண்டு பேசியதுடன், அவர் பெயரில் வந்த வாட்ஸ்-அப் தகவல்களையும் காண்பித்துள்ளார். மேலும் தனது மற்ற தோழிகளையும் உஷார்படுத்தி விட்டார்.



இதுகுறித்து போலீசில் பாதிக்கப்பட்டு ஏமாந்த பெண்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். விசாரணையில் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பெண் பழகுவது போல் ராமநாதபுரம் பெண்களிடம் தகவல் அனுப்பி பழகியவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேலபுழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பீம்ராவ் (35) என தெரியவந்தது. உடனே, தன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து உஷாரான  பீம்ராவ் செல்போனில் உள்ள தகவல்களை அழித்துள்ளார். மேலும் யாருக்கெல்லாம் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி இருந்தாரோ, அந்த, பெண்களை தொடர்பு கொண்டு போலீசுக்கு சென்றால், சேகரித்து வைத்துள்ள உங்களின் அந்தரங்க, ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். மிரட்டிய தகவலையும் போலீசாருக்கு இளம்பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  தலைமையிலான போலீசார் செங்கம் பகுதிக்கு விரைந்து சென்று பீம்ராவை கைது செய்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இவருக்கு திருமணமாகி முதல் மனைவி திவ்யா பிரிந்து சென்ற நிலையில் இரண்டாவதாக ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள விபரங்கள் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கைது செய்த பீம்ராவை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கைதான பீம்ராவ் தனது செல்போனில் “கேர்ள் பிரண்ட் சர்ச்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் மூலம் சில பெண்களின் எண்களை தேடி எடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பொதுவாக இந்த செயலியை டவுன்லோடு செய்ததும் அவரவர் செல்போனில் உள்ள எண்களையும், காலரி விவரங்களையும் அனுமதிக்கலாமா? என்று கேட்கும். அதற்கு அனுமதித்ததும் செல்போனில் உள்ள அனைத்து விவரங்களும் அந்த செயலியால் எடுக்கப்பட்டு விடுகிறது. ஒருவர் அந்த செயலியை டவுன்லோடு செய்துவிட்டால் அந்த செயலியை வைத்துள்ள அனைவரின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள விவரங்கள் படங்கள், வீடியோக்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்பவருக்கு சென்றுவிடுகிறது.



எனவே செல்போன் ஆன்ட்ராய்டு செயலியில் இலவசமாக கிடைக்கும் செயலியை பதிவிறக்கம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். தங்களின் விவரங்கள், அந்தரங்க விஷயங்கள் நமது செல்போனில் தானே உள்ளது என்று நினைத்தால் பீம்ராவ் போன்ற ஆசாமிகளின் மோசடியில் பெண்கள் சிக்க நேரிடும். எனவே பெண்கள் மட்டுமில்ல அனைவரும் இதுபோன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.