Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் பெங்களூருவை சேர்ந்த பெண்ணிடம் இருந்து பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.32 கோடி அபேஸ்
பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர், டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் 32 கோடி ரூபாயை இழந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சர்வதேச கொரியர் நிறுவனமான DHL-ஐ சேர்ண்ட்க்ஹ ஊழியர்கள் மற்றும் சைபர் க்ரைம், மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளைப் போல நாடகமாடி, மோசடி செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த கும்பல் ஒரு மாத காலம் டிஜிட்டல் முறையில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.
சதி வலையில் சிக்கியது எப்படி?
நவம்பர் 14 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி, செப்டம்பர் 15, 2024 அன்று பாதிக்கப்பட்டவருக்கு DHL-ல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர் பேசுகையில், மும்பையின் அந்தேரியில் இருந்து அந்த பெண்ணின் பெயருக்கு வந்துள்ள ஒரு பார்சலில் நான்கு பாஸ்போர்ட்கள், மூன்று கிரெடிட் கார்டுகள் மற்றும் MDMA உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தான் மும்பைக்கு பயணம் செய்யவில்லை என்று அந்த பெண் கூறிய போதிலும், அவரது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த விவகாரம் சைபர் க்ரைம் வழக்காக மாற்றப்படுவதாகவும் தொடர்பு கொண்டவர் தெரிவித்துள்ளார்.
”சிபிஐ அதிகாரிகளாக நாடகம்”
அந்த பெண் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கு முன்பாகவே, அந்த தொலைபேசி உரையாடலானது சிபிஐ அதிகாரிகள் என கூறிக்கொண்ட மற்றொரு கும்பலுக்கு மாறியுள்ளது. அப்போது தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியதற்காக நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், உங்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன என கூறி மிரட்டியுள்ளனர். உள்ளூர் காவல்துறையை அணுக வேண்டாம் என்றும், அவருடைய அடையாளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள் உங்களது வீட்டைக் கண்காணித்து வருவதாகவும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தனது குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என கூறி, அந்த கும்பலின் கோரிக்கைக்கு பாதிக்கப்பட்ட பெண் இணங்க தொடங்கியுள்ளார்.
டிஜிட்டல் அரெஸ்ட்
இதையடுத்து அந்த கும்பல் இரண்டு ஸ்கைப் ஐடிகளை உருவாக்குமாறு அந்த பெண்ணை அறிவுறுத்தியுள்ளனர். அதன் மூலம் மோஹித் ஹண்டா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டஒருவர், அந்த பெண்ணை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறி கேமரா மூலம் அவளைத் தொடர்ந்து கண்காணிக்க தொடங்கியுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு பிரதீப் சிங் எனும் நபர் அந்த பணியை தொடங்கி, கடுமையாக திட்டி கைது செய்வதாக மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
கோடிகளில் பணம் பறிப்பு:
பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து கூறுகையில், ”என்னை தொடர்பு கொண்டவர்களுக்கு எனது தொலைபேசி செயல்பாடு மற்றும் இருப்பிடம் குறித்து தெரிந்திருந்தது. இது எனது பயத்தை அதிகரித்தது. இந்த வழக்கில் இருந்து எனது பெயரை அழிக்க ஒரே வழி, எனது அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள நிதி புலனாய்வுப் பிரிவின் (FIU) சரிபார்ப்புக்காக சமர்ப்பிப்பதே என்று தெரிவித்தனர். மோசடி செய்பவர்கள் நிதின் படேல் என்ற பெயரில் கையொப்பமிடப்பட்ட சைபர் கிரைம் துறையிலிருந்து போலியான கடிதங்களையும் சமர்ப்பித்தனர்.
செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 22, 2024 வரை, அவர் தனது அனைத்து வங்கி விவரங்களையும் ஒப்படைத்துள்ளார். அவற்றை ஆராய்ந்த பிறகு, வழக்கில் இருந்து விடுவிக்க அவரது சொத்துக்களில் 90 சதவிகிதத்தை டெபாசிட் செய்ய வற்புறுத்தியுள்ளனர். வேறு வழியின்றி அதனை ஏற்றுக்கொள்ள, கூடுதலாக ரூ.2 கோடியை ஜாமீனாக டெபாசிட் செய்யுமாறும், அதைத் தொடர்ந்து வரிகள் என பெயரிடப்பட்ட கூடுதல் தொகைகள் டெபாசிட் செய்யுமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
உண்மை வெளிப்பட்டது எப்படி?
மோசடி செய்பவர்கள் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை பணத்தைக் கேட்டுக்கொண்டே இருந்துள்ளனர். டெபாசிட் செய்யப்பட்ட தொகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் திருப்பித் தரப்படும் என்று பலமுறை உறுதியளித்தனர். பல தாமதங்களுக்குப் பிறகு, மார்ச் 26, 2025 அன்று அனைத்து தகவல்தொடர்புகளும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில், பாதிக்கப்பட்ட பெண் ரூ.31.83 கோடி மதிப்புள்ள 187 பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார். இந்த மோசடி முதன்மையாக அவரது மொபைல் எண்ணில் அழைப்புகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், ஒரு வழியாக தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு காவல்துறையை அணுகி அந்த பெண் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.