SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
SIR-ஐப் புறக்கணிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள்
போலி, மோசடி வாக்காளர்களைக் கண்டறிந்து களையெடுக்கும் நோக்கில், SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. எனினும் இது எதிர்க் கட்சிகளின் வாக்குகளைத் திட்டமிட்டு பறிக்கும் முயற்சி என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், SIR பணிகளில் ஆசிரியர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களாக ஈடுபட்டு வருகின்றனர். SIR படிவங்களை வீடுவீடாகச் சென்று கொடுத்து, அவற்றை நிரப்பி பெறும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு
வழக்கமான அலுவல்களுக்கு மத்தியில் இந்தப் பணிகளை மேற்கொள்வது கடினமாக இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் SIR பணிகளை புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
உரிய திட்டமிடல், பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணிகளைச் சுமத்தி இருப்பதாலும், நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் SIR பணிகளைச் செய்ய நிர்ப்பந்திப்பதாலும் தங்ககளுக்கு கடுமையான பணிச் சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளனர்.