பெங்களூரை அடுத்த கே.ஆர்.நகரில் வீட்டு நாய் ஒன்றை மரக்கட்டையால் மூன்று பேர் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் கிழக்கு நகர் கே.ஆர்.நகரில் வசித்து வருபவர் கதிகப்பா. இவர் தனது வீட்டில் அச்சு என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை கதிகப்பா தனது அச்சுவை வீட்டிற்கு வெளியே விளையாட விட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள நாகராஜ் என்பவருக்கு சொந்தமான நாயுடன் அச்சு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
சத்தம்கேட்டு கதிகப்பா வெளியே வந்து பார்த்து நாய் அச்சுவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். காலை முதல் சண்டையிட்ட பயத்தில் இருந்த அச்சு என்ற நாய் கத்தியுள்ளது.
இரவு பக்கத்து வீட்டுக்காரர்களான ரஞ்சித், ராகுல் மற்றும் ரஜத் ஆகியோர் கதிகப்பா வீடு வழியாக சென்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்து அச்சு வெகுநேரமாக குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்க தொடங்கியுள்ளனர். அதில் வலி பொறுக்க முடியாமல் நாய் தரையில் சுருண்ட படி கத்தி உள்ளது. அவர்களை தடுக்க முயன்றுள்ளார். தொடர்ந்து அந்த நபர் இவர்கள் செய்யும் கொடூரத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இருந்தாலும் அந்த நபரை மூன்று பேரும் தள்ளி விட்டனர். பின்னர் தொடர்ந்து அவர்கள் நாயை கடுமையாக தாக்கினர். இதையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த நாயின் உரிமையாளர் தட்டி கேட்டுள்ளார். தொடர்ச்சியாக நாயை மீட்க முயன்றபோது, கதிகப்பாவையும் தாக்கியுள்ளனர்.
கதிகப்பாவை சிகிச்சைக்காக கே.ஆர்.புரம் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவரது நாய் டோம்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய கதிகப்பா கே.ஆர். புரம் காவல் நிலையத்தில் தனக்கும் தனது நாயுக்கும் நடந்த கொடூரத்தை வீடியோவை ஆதரமாக கொண்டு புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த கே.ஆர்.புரம் காவல்துறையினர், ரஞ்சித், ராகுல், ரஜத் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் தானாக முன்வந்து விலங்குகளை காயப்படுத்துதல், கொலை செய்தல் அல்லது காயப்படுத்துதல், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11ன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.