Bengaluru Crime: பெங்களூருவில் உணவு டெலிவரி ஊழியர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு:


பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் 30 வயதான பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் உணவு ஆர்டர் செய்தார். இதனை அடுத்து, உணவை டெலிவரி செய்வதற்கு ஊழியர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.


வீட்டிற்கு வந்த உணவு டெலிவரி ஊழியர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.  இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடியிருப்பில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில்  20 வயதான ஆகாஷ் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரை போலீசார் தேடி வருகின்றனர். 


”கழிவறையை பயன்படுத்தலாமா?”


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "உணவு டெலிவரி ஊழியர் என் வீட்டிற்கு வந்து உணவை வழங்கினார். மரியாதையாக, நான் அவரிடம்  தண்ணீர் வேண்டுமா என்று கேட்டேன். அவர் ஆம் என்றார். நான் உள்ளே சென்று ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொடுத்தேன்.


அதன் பிறகு அவர் வெளியேறினார். இருப்பினும், சில நொடிகளுக்குப் பிறகு, அவர் வீட்டின் கதவை தட்டினார். நான் கதவை திறந்தவுடன், கழிவறையை பயன்படுத்தலாமா? அவசரம் என்று கூறினார்.  நானும், அவரை கழிவறை பயன்படுத்த அனுமதித்தேன். கழிவறையில் இருந்து வெளியே வந்த அவர், மீண்டும் என்னிடம் தண்ணீர்  கேட்டார்.  நானும் தருகிறேன் என்று கூறி, அவரை வீட்டிற்கு வெளியே நிற்க சொன்னேன்.


ஆனால், அவர் என்னை பின்தொடர்ந்து சமையல் அறைக்கு வந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். பின்னர், நான் அவரை பாத்திரத்தால் தாக்கிவிட்டு கூச்சலிட்டேன். உடனே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். டெலிவரி ஊழியர் என்னிடம் இந்தி மற்றும் ஆங்கிலம் பேசினார்” என்று தெரிவித்தார்.  


இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில் ஆகாஷ் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளது. டெலிவரி ஊழியர்களை குடியிருப்புக்கு வெளியே தான் ஆர்டரை டெலிவரி செய்ய வேண்டும். எனவே, ஆகாஷ் என்பவரை தேடி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க


வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்! செருப்பு மாலை போட்ட கும்பல் - ம.பியில் அதிர்ச்சி!


ஒரே பகுதியை குறிவைக்கும் இரவு நேர திருடர்கள்.. அச்சத்தில் தூங்காவனமாக மாறிய நெல்லை கிருபா நகர்..