பெங்களூரில் 52 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது காரில் விஷவாயுவை நிரப்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தொழில்நுட்ப வல்லுநரான 52 வயதான விஜய் குமார், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இதயத்தில் பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், இதய நோயாளி என்றே முழுமையாக நினைத்துகொண்ட அவர், உடல்நிலை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 


இந்தநிலையில், மன உளைச்சலில் இருந்த காரணத்தினால் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்து நச்சு தன்மை கொண்ட நைட்ரஜன் வாயு நிரப்பபட்ட சிலிண்டரை வாங்கியுள்ளார். தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தனது வீட்டை விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிய விஜயகுமார், அலுவலகத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, அவர் தனது ஃபோர்டு ஈகோஸ்போர்ட்டை ஒரு பூங்காவிற்கு அருகில் நிறுத்தியுள்ளார். தொடர்ந்து, தனது காரை யாரும் பார்த்திடாத வகையில் மழை கவரால் முழுவதும் மூடிவிட்டு, உள்ளே சென்று அமர்ந்துள்ளார். 


காரின் பின் இருக்கைக்கு அமர்ந்து கொண்ட விஜயகுமார் நைட்ரஜன் சிலிண்டரின் முனையைத் திறந்து, வாகனத்தில் நச்சு வாயுவை நிரப்பியுள்ளார். தொடர்ச்சியாக மூச்சு விடமுடியாமல் சில மணிநேரங்களுக்குப் பிறகு இறந்தார். 


அந்த வழியாக சென்றவர்கள் காரை பெட்ஷீட்டால் மூடியிருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே விஜய்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 


இறந்த விஜய்குமார் காரை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், எனது கார் முழுவதும் நச்சுவாயு நிரம்பியுள்ளது. வேறு யாரும் கதவை திறக்கவேண்டாம். காரின் கதவை போலீசார்தான் திறக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். 


இதுகுறித்து வடக்கு பெங்களூர்  காவல்துறை துணை ஆணையர் வி பாட்டீல் தெரிவிக்கையில், “ காருக்குள் ஒரு தற்கொலைக் குறிப்பும் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் விஜய் குமார் தனது இதய நோய் காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்” என அந்த கடிதத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார். 


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தற்கொலைக்கான காரணங்கள் : 


தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 


மாநிலம் வாரியாக தற்கொலை விவரம்


மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)


அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050