கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் காவல்துறையினர் கல்லூரி மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவர் சமூக வலைத்தளங்களில் பெண்ணாக காட்டிக்கொண்டு, பல்வேறு இளம்பெண்களிடம் லெஸ்பியனைப் போல பழகி, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களைப் பெற்று, அதன்பிறகு மிரட்டி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 


பெங்களூருவில் ஃப்ரேசர் டவுன் பகுதியைச் சேர்ந்த பிரபஞ்ச் நாசப்பா என்பவர் இந்தக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு பயிலும் இவர், சுமார் 30 முதல் 40 இளம்பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், சமூக வலைத்தளங்களில் பெண் பெயரில் கணக்கு தொடங்கி சுமார் 2 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் சமூக வலைத்தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கிப் பெண்களுக்கு ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். மேலும், அவர்களிடம் தான் லெஸ்பியன் எனவும் தனக்கு உறவு வேண்டும் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் தான் மாடலிங் துறையில் இருப்பதாகவும், அந்தத் துறைக்குள் நுழைய வேண்டும் என விரும்புவோருக்குத் தன்னால் உதவ முடியும் எனவும் கூறியுள்ளார். 


இந்நிலையில் அவரால் மோசடி செய்யப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். `பிரதிக்‌ஷா என்ற பெயரில் போலியாக கணக்கு தொடங்கிய குற்றவாளி, புகார் செய்த பெண்ணிடம் லெஸ்பியன் உறவு வேண்டும் எனக் கூறி பழகியுள்ளார். மேலும் தனது தன்பாலீர்ப்புக்காக சமூகத்தால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதாகவும் கூறியதோடு, புகார் செய்த பெண்ணின் நம்பிக்கையை வெல்வதற்காக சில அந்தரங்கப் படங்களையும் தன்னுடையது எனக் கூறி அனுப்பியுள்ளார். புகார் அளித்த பெண்ணிடம் அவர் அனுப்பும் ஒவ்வொரு படத்திற்கும் அவர் 4 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறியுள்ளார்’ என இந்த வழக்கு விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


இதனை நம்பிய பாதிக்கப்பட்ட பெண் குற்றவாளிக்குப் படங்களை அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் இவ்வாறான மோசடியில் சிக்கியுள்ளதாக உணர்ந்த அவர், குற்றம் சாட்டப்பட்ட நபரை ப்ளாக் செய்துள்ளார். எனினும் வேறொரு கணக்கில் இருந்து பணம் கேட்டு தொடர்ந்து மெசேஜ்கள் வருவதும், பணம் தராவிட்டால் படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக மிரட்டியதாலும், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்ததால் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.