Marriage Dispute Murder: அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அனஸ்தீசியாவை கொண்டு கணவனே மனைவியை கொன்றது, ஆறு மாதங்களுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது.
மனைவியை கொன்ற கணவன் கைது
விக்டோரியா மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மகேந்திர ரெட்டி என்பவர், தனது மனைவி டாக்டர் கிருத்திகாவின் கொலை வழக்கில் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகேந்திரா தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை அரங்குகளில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள, சக்திவாய்ந்த மயக்க மருந்தான புரோபோஃபோலை வழங்கியதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் புலனாய்வு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
திருமணமான ஒரே ஆண்டில் மரணம்:
மகேந்திர ரெட்டி மற்றும் கிருத்திகாவிற்கு கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி திருமணம் நடைபெற்றது. அடுத்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், கடந்த ஏப்ரல் 23 அன்று மாரத்தஹள்ளியில் உள்ள தனது தந்தையின் வீட்டில் தங்கியிருந்தபோது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு மேலாக அடுத்தடுத்து அங்கு வந்த மகேந்திர ரெட்டி, மனைவிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மீண்டும் மீண்டும் நரம்பு ஊசி போட்டது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 23ம் தேதி அதேபோன்று ஊசி செலுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே கிருத்திகா மயங்கி விழுந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்போது, தனது மனைவிக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என மகேந்திரா பிரச்னை செய்துள்ளார்.
சூடுபிடித்த வழக்கு விசாரணை:
ஆரம்பத்தில், அதிகாரிகள் கிருத்திகாவின் உயிரிழப்பை சாதாரண அதேநேரம் இயற்கைக்கு மாறான மரணம் என்று மட்டுமே பதிவு செய்தனர். ஆனால் இது சாதாரணமான மரணம் போன்று தோன்றவில்லை என, கிருத்திகாவின் மூத்த சகோதரியும், கதிரியக்க நிபுணருமான டாக்டர் நிகிதா சந்தேகத்தை எழுப்பி முழுமையான விசாரணையைக் கோரினார். இதையடுத்து கிருத்திகாவின் தந்தையும் காவல்நிலையத்தில் முறையாக புகாரளித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் என்ன?
கிருத்திகாவின் தந்தை அளித்த புகாரில், ”திருமணமானதிலிருந்தே மகேந்திர ரெட்டி தனது மகளை முறையாக கவனித்துக்கொள்ளவில்லை. தனது பெயரில் சொந்தமாக மருத்துவமனை கட்ட பணம் கேட்ட கோரிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து, மனைவியை புறக்கணிக்க தொடங்கினார். சம்பவம் நடந்த நாளான்று வயிற்று வலியால் துடித்த எனது மகளுக்கு அவரது விருப்பத்தையும் மீறி பல முறை மருந்து கொடுத்தார். கிருத்திகா மயக்கமடைந்து சிகிச்சைக்கு பதிலளிக்காமல் இருப்பதைக் கண்டபோது, ஒரு மருத்துவராக இருந்தும் மகேந்திர ரெட்டி CPR கூட செய்யவில்லை”என தெரிவித்துள்ளார். இதுபோக அவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் கிருத்திகாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர்.
புலனாய்வில் அம்பலமான உண்மை:
இதையடுத்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியான தடயவியல் அறிக்கைகள், கிருத்திகாவின் பல உடல் உறுப்புகளில் புரோபோபோல் இருப்பதை உறுதிப்படுத்தின. மயக்க மருந்து அவரது மரணத்திற்குக் காரணம் என்பது உறுதியானது. மாரத்தஹள்ளி போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 103 இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து, உடுப்பி மாவட்டத்தில் வைத்து மகேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் தனது மருத்துவமனை அணுகலைப் பயன்படுத்தி ஆப்ரேஷன் தியேட்டர் மற்றும் ICU ஸ்டாக்கில் இருந்து போதைப்பொருட்களைப் பெற்றதாகவும், பின்னர் கொலைக்கு அவற்றைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. குற்றத்தைத் திட்டமிடவும் மறைக்கவும் அவர் தனது மருத்துவ அறிவை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் விசாரித்ததில் மகேந்திராவின் குடும்பத்தினர் ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
குற்றப் பின்னணி
அவரது இரட்டை சகோதரர் டாக்டர் நாகேந்திர ரெட்டி, 2018 ஆம் ஆண்டு HAL காவல் நிலையத்தில் பல மோசடி மற்றும் குற்ற வழக்குகளை எதிர்கொண்டார். அந்த புகார்தாரரின் குடும்பத்தினரை மிரட்டியது தொடர்பான வழக்குகளில் மகேந்திராவும் மற்றொரு சகோதரர் ராகவ் ரெட்டியும் 2023 ஆம் ஆண்டு இணை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். திருமணத்தின் போது இந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாக கிருத்திகாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
28 வயதான டாக்டர் கிருத்திகா ரெட்டி, மிகவும் திறமையான தோல் மருத்துவராக இருந்தார். வைதேஹி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் எம்பிபிஎஸ், ராய்ச்சூரில் உள்ள நவோதயா மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவத்தில் எம்.டி., மற்றும் NBEMS இல் தோல் மருத்துவம், வெனிரியாலஜி மற்றும் தொழுநோய் ஆகியவற்றில் டி.என்.பி. ஆகியவற்றை முடித்தார். கணவருடன் சேர்ந்து விக்டோரியா மருத்துவமனையில் பணியாற்றி வந்த கிருத்திகா, தனது கனவு மருத்துவமனையான "ஸ்கின் அண்ட் ஸ்கால்ப்" ஐ மே 4, 2025 அன்று திறந்து வைக்க திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.