காவல்துறை துணை ஆய்வாளர்  இரண்டாம் மனைவியின் மகள் மற்றும் அவரது சகோதரி மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காவலர் மீது பாலியல் புகார்:


கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறை ஆய்வாளராக இருக்கும் தன் கணவர் மீது ஜே.சி.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் தன் கணவர் தனது 13 வயது மகள் மற்றும் தனது சகோதரியை பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.


காவல் நிலையத்தில் மலர்ந்த காதல் தீ:


புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி தன் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட காவல்நிலையத்தை அனுகியுள்ளனர். அப்போது, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர் இருவரிடமும் விசாரணை நடத்தியதோடு, புகாரும் எழுதியிருக்கிறார். விசாரணை தொடர்பாக பெண்ணுக்கு அடிக்கடி அழைபேசியில் அழைத்து பேச, காவல் துணை ஆய்வாளருக்கும், புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது. ஏற்கனவே திருமணமான காவலரும் தன் புது காதலியை கரம்பிடிக்க முடிவு செய்து முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதற்கிடையே காதலிக்கும் விவாகரத்துக் கிடைக்க இருவரும் உடனடியாக திருமணம் செய்துகொண்டுள்ளனர். இரண்டாம் மனைவிக்கு 13 வயதில் ஒரு மகள் மற்றும் சகோதரி ஒருவரும் உள்ளார்.


வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை:


ஆரம்ப நாள்களில் நன்றாகச் சென்று கொண்டிருக்க, காவல்துறை கணவரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தன் வளர்ப்பு மகளுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அதோடு, மனைவியின் சகோதரியையும் பாலியல் சீண்டல் செய்திருக்கிறார். மனைவியிடமும் இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் விரக்தியடைந்த அந்த பெண் தன் கணவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.





போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு:


பெண்ணின் புகாரை படித்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் காவல்துறை துணை ஆய்வாளர் மீது போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்கவேண்டிய காவலரே “வேலியே பயிரை மேய்வது” என்பதைப் போல வளர்ப்பு மகள், மனைவியின் சகோதரி, மனைவி மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




வெளியான அதிர்ச்சி அறிக்கை:


சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் (2019-2021) படி 18 முதல் 49 வயதான பெண்கள்  கணவனால் பாலியல், உணர்வு ரீதியிலான, உடல்ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு அதிகம் உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி கர்நாடகாவில் 48.4 சதவீத பெண்கள் கணவனால் துன்புறுத்தலுக்கு உள்ளாவது தெரியவந்துள்ளது. கர்நாடகாவிற்கு அடுத்து பீகாரில் 43 சதவீதம் பேரும், தெலங்கானாவில் 41 சதவீதம் பேரும், மணிப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் 40 சதவீதம் பேரும் தங்கள் கணவர்களால் பாலியல் மற்றும் உடல்ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.