பெங்களூரு: ராய்ச்சூர் அருகே மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுத்து வந்த இளம் பெண்ணை அவரது அண்ணன் கோடரியால் வெட்டிக்கொன்றார். செவ்வாய்க்கிழமை இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா கப்பூரை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 22). இவரது அண்ணன் ஷியாம் சுந்தர் (28). இந்த நிலையில் சந்திரகலாவுக்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்திருந்தனர். இந்த நிலையில் (13-ந்தேதி) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் மாப்பிளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு சந்திரகலா மறுத்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் பெற்றோர், சகோதரர் அவரை சமாதானப்படுத்தி வந்தனர். திருமண நாள் நெருங்கி வந்ததால் சந்திரகலாவின் வீட்டில் பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். திருமணத்திற்கு 2 நாட்கள் உள்ள நிலையில் சந்திரகலா மாப்பிள்ளை கருப்பாக உள்ளார். எனவே தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவரது அண்ணன் ஷியாம் சுந்தர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கூறியுள்ளார். இதனால் அண்ணன்-தங்கை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் கோடரியால் சந்திரகலாவை சரமாரியாக வெட்டினார். இதில் சந்திரகலா ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. சமபவம் பற்றி தகவல் அறிந்ததும் கப்பூர் போலீசார் விரைந்து வந்து, கொலையான சந்திரகலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேவதுர்கா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், தன்னை திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளை கருப்பாக இருந்ததால் திருமணத்திற்கு சந்திரகலா மறுத்ததும், இதனால் ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் அவரை கோடரியால் வெட்டிக் கொன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷியாம் சுந்தரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணத்திற்கு மறுத்த கட்டாய திருமணம் நடத்திவைக்க முயன்ற பெற்றோர் தற்போது வளர்த்த மகளை ,அண்ணன் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப அமைப்பு முறையை சிறந்த தொரு முன் மாதிரியாக, உலக நாடுகளிடம் தொடர்ந்து பறைசாற்றிவரும் இந்தியாவில், திருமணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமணபந்தமானது, நெடுங்காலமாக இந்திய பெண்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பெண்ணுரிமைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால், திருமணம் தொடர்பாக பொதுவான சட்டம் ஏதும் இந்தியாவில் இயற்றப்படவில்லை. மாறாக மொழி, இனம், ஜாதி, சமயம், கலாச்சாரம், பண்பாடு, மாநிலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் திருமணம் தொடர்பான சடங்குகள் வேறுபடுகின்றன. எனவே மதங்களை அடிப்படையாகக் கொண்டு, தனித்தனியாக திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அவைகளே நடைமுறையில் உள்ளன. திருமணம் என்பது கிறித்தவம், இந்து மற்றும் இசுலாம் போன்ற மதங்களைப் பொறுத்தவரையில் ஒரு சமயச் சடங்காகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சமூகத்தில் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது பெண்களுக்கு பிடிக்காத ஒருவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வருகின்றனர்.