யூ டியூப் தளத்தில் தமிழ் நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் துரைமுருகன். இவர் சாட்டை என்ற பெயரில் தமிழில் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த நிலையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாக பேசியதாக திருச்சியை சேர்ந்த வினோத் என்பவரை வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிடச் செய்தார். இந்த சம்பவத்தின்போது, சாட்டை துரைமுருகன் மற்றும் அவருடன் வந்த நாம் தமிழர் நிர்வாகி வினோத், மகிழன், திருச்சி சரவணன் ஆகியோர்  தன்னை மிரட்டியதாக கார் உற்பத்தி நிறுவனர் கடை உரிமையாளர் வினோத் திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.


அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் சாட்டை துரைமுருகன் உள்பட நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரும் முசிறி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.




இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கினார். தி.மு.க. வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் கரூர் போலீசில் சாட்டை துரைமுருகன் மீது ஏற்கனவே புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. அந்த மனுவில், சாட்டை துரைமுருகன் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்புபடுத்த அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.


இதையடுத்து, இந்த புகார் மனுவின் அடிப்படையில் அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவரை போலீசார் கைது செய்து மீண்டும் லால்குடி போலீசில் கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். பின்னர், கட்சி கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்ட காரணத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். சாட்டை துரைமுருகன் தனது யூ டியூப் சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்புவையும் இணைத்து அவதூறாக வீடியோ வெளியிட்டார் என்பதும், அதற்கு தி.மு.க.வினர் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், சாட்டை துரைமுருகன் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அது பெரும் சர்ச்சைக்குள்ளாகியதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!