திடீர் மாயம்

 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அதோடு இவர் கடந்த 5  ஆண்டுகளாக, சென்னை விமான நிலையத்தில்,  வெளிநாட்டு  விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18 ஆம் தேதி மதியம், சகோதரி வீட்டிலிருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்குப் புறப்பட்டு சென்றார். அப்போது பணி முடிந்ததும், அங்கிருந்து சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் போய்விட்டுதான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றார்.

 



 

காணவில்லை என புகார்

 

ஆனால் ஜெயந்தன் அவ்வாறு கூறிவிட்டு சென்று சில நாட்கள் ஆகியும், அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அதோடு அவருடைய சகோதரி, ஜெயந்தனுக்கு  செல்போனில் தொடர்பு கொண்ட போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்து கொண்டிருந்தது. இதை அடுத்து ஜெயந்தன்  சகோதரி, பழவந்தாங்கல் போலீசில், தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார்.  இதனெடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

புதுக்கோட்டை சென்ற போலீஸ்

 

இந்நிலையில் ஜெயந்தன் செல்போன் சிக்னலை  வைத்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை மேற்கொண்டபொழுது , புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது. இதனை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி புதுக்கோட்டை பகுதிக்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில்  பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். பாக்கியலட்சுமி, பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை விசாரித்த பொழுது முன்னுக்குப் பின் புறமான தகவல்களை தெரிவித்தால் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்தார்.

 



 

ஈர்ப்பால் திருமணம்

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாக்கியலட்சுமியை ஜெயந்தன் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் 2021-ஆம் ஆண்டே பிரிந்து விட்டனர். இதனிடையே கடந்த 19-ஆம் தேதி பாக்கியலட்சுமிக்கு போன் செய்த ஜெயந்தன், அவரைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் அவரது வீடு உள்ள செம்மாளம்பட்டி கிராமத்திற்குச் சென்றுள்ளார். பாக்கியலட்சுமி மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குறித்து ஜெயந்தனுக்கு தெரியவந்தது

 

சூட்கேசில் கொண்டுவரப்பட்ட உடல்

 

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அன்று இரவு அங்கேயே ஜெயந்தன் தங்கி உள்ளார். ஜெயந்தன் தூக்கத்தில் இருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் சங்கர் என்பவருடன் சேர்ந்து ஜெயந்தனைக் கொன்ற பாக்கியலட்சுமி, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டைப்பை மற்றும் சூட்கேசில் அடைத்து வைத்தார்.

 

தலை மற்றும் வயிறு ஆகிய பாகங்கள்

 

பின்னர் கை மற்றும் கால்களை மட்டும் தனியாக எடுத்து பாலீத்தீன் கவரில் சுற்றி 20-ஆம் தேதி பகல் 11 மணிக்கு சென்னை அருகே கோவளத்திற்கு வந்து, அங்குள்ள தனது நண்பரும் பூமிநாதசுவாமி கோயில் பூசாரியுமான வேல்முருகன் என்பவரின் உதவியுடன் கோவளம் கடற்கரை அருகே உடல் பாகங்களை புதைத்துள்ளார். பின்னர் 26ம் தேதி மீண்டும் புதுக்கோட்டையில் இருந்து தலை மற்றும் வயிறு ஆகிய பாகங்களை மற்றொரு பாலித்தீன் கவரில் சுற்றி, சூட்கேசில் வைத்து வாடகை கார் மூலம் கேளம்பாக்கம் வந்து, பின்னர் மீண்டும் வேல்முருகனை தொடர்பு கொண்டு அவர் மூலமாக கோவளம் கழிவெளி பகுதியில் பாகங்களை புதைத்ததாக போலீசாரிடம் பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.

 



சில பாகங்களை மீட்ட போலீஸ்

 

இதையடுத்து கேளம்பாக்கம் காவல் துறையினர் மற்றும் சிறுசேரி தீயணைப்பு மீட்பு குழுவினர் பூமிநாதர் கோயில் அருகில் உள்ள குட்டையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வீசப்பட்ட ஜெயந்தனின் தலை மற்றும் உடல்பாகங்களை மீட்டனர்.