கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். கோரமண்டல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மஞ்சுநாத், தனது மனைவி விமலா மற்றும் 3 மகள்கள் உடன் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். மஞ்சுநாத்திற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காலில் அடிபட்டு காயம் இருந்ததால் அவரால் வெகுதூரம் நடக்க முடியாது என்பது தெரிகிறது. இதனால் கடந்த 16ஆம் தேதி மஞ்சுநாத்தை அவரது நண்பர்கள் அறையில் விட்டுவிட்டு, அவரது குடும்பத்தினர் தனியாக கிரிவலம் சென்றுள்ளனர். அதனை தொடந்து மஞ்சுநாத் அவரது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன்னால் கிரிவலம் செல்ல முடியவில்லை என வருத்தமாக பேசியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவரது தொலைபேசி ‘ஸ்ட்ச் ஆப்’ ஆகி இருந்துள்ளது. மஞ்சுநாதின் தொலைபேசி எண்ணுக்கு அவருடைய மனைவி விமலா பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லையாம். அதனைத்தொடர்ந்து கிரிவலம் சென்று விட்டு விடுதிக்கு வந்த மஞ்சுநாதனின் நண்பர்கள், அறையில் மஞ்சுநாத் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மஞ்சுநாத்தை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் மஞ்சுநாத் கிடைக்கவில்லை.

Continues below advertisement

அதனை தொடர்ந்து, ஏந்தல் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மஞ்சுநாத் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக திருவண்ணாமலை கிழக்குப் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் அவர் விஷத்தைக் குடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர், மஞ்சுநாத்தின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்த விமலா, தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் விமலா கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத் கிரிவலம் செல்ல முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement

தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)