Atrocities On Dalits: மகாராஷ்ரா மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் இரக்கமில்லாமல் நடுரோட்டில் பட்டியலினப் பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான வீடியோ:
மகாராஷ்டிரா மாநிலம் சதாராவுக்கு அடுத்து உள்ள மான் எனும் ஒரு சிறிய கிராமத்தில் எடுக்கப்பட்டதாக, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், நடுரோட்டில் படுத்துக் கொண்டிருந்த பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் கட்டை போன்றவற்றை வைத்துக் கொண்டு கடுமையாக தாக்கியது. அங்கு 20க்கும் மேற்பட்டோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 பேர் சேர்ந்து அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்து ஆபாச வார்த்தைகளால் பேசியது போன்று தெரிகிறது. அங்கு இருப்பவர்கள் சிலர் தடுத்து நிறுத்தியும் அந்த கும்பல் விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது போன்று வீடியோ வெளியானது. வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தன.
திடுக்கிடும் தகவல்:
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்தது. பாதிக்கப்பட்ட பெண் கடனாக 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். தன்னுடைய பணத்தை திருப்பி தருமாறு சம்மந்தப்பட்ட நபரிடம் அந்த பெண் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் தராமல் பல நாள் இழுத்தடித்துள்ளனர். ஒரு கட்டத்தில், பணத்தை திருப்பி கேட்டதற்கு அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர்” என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சந்தோஷ் ஷிண்டே, ஜனப்பா ஷிண்டே, சாந்தாராம் நரலே, நரலே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் கெடுத்த புகாரின் அடிப்படையில் தலித் பெண்ணை இரக்கமின்றி தாக்கியவர்கள் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தொடரும் கொடூரங்கள்:
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது, பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.