திருவாரூர் அருகே ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி. தடுக்க வந்த காம்ப்ளக்ஸ் உரிமையாளர் குத்திக்கொலை. பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் பாணியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது போலீசார் அதிர்ச்சி.
திருவாரூர் மாவட்டம் கூடூர் பகுதியில் தமிழரசன் என்பவருக்கு சொந்தமான லட்சுமி காம்ப்ளக்ஸ் என்கிற தனியார் வணிக வளாகம் உள்ளது அதற்குப் பின்புறம் தமிழரசு என்பவர் தனது வீட்டில் வசித்து வருகிறார் அந்த தனியார் வணிக வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் ஏடிஎம் மையத்திலிருந்து சத்தம் கேட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் தப்பி ஓடியுள்ளனர். நான்கு பேரில் லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான மதன் என்கிற இளைஞரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதனை அறிந்த அவனது கூட்டாளி இளமங்கலம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பிரதாப் தனது இரு சக்கர வாகனத்தை திருப்பிக்கொண்டு மதனை காப்பாற்ற வந்துள்ளான் அப்போது அவனை பிடிக்க முயற்சி செய்த தனியார் வணிக வளாகத்தில் உரிமையாளர் தமிழரசனை பிரதாப் தனது கையில் இருந்த திருப்புலியால் குத்தி உள்ளான் இதில் தனது நெஞ்சு பகுதியில் பலத்த காயமடைந்த தமிழரசன் அங்கேயே மயங்கி விழுந்தார்.
ஏடிஎம் மையத்தில் கிராம மக்கள் சென்று பார்த்தபோது வெல்டிங் வைக்க பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் கடப்பாரை உள்ளிட்ட பொருட்களால் ஏடிஎம் இயந்திரத்தின் வெல்டிங் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது அதற்கு முன்னரே காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்ததன் பேரில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் மற்றும் ரோந்து படை காவல்துறையினர் அதி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் தீவிர தேடுதலை அடுத்து லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான மதன் இலமங்கலம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பிரதாப் மற்றும் ஊட்டியாணி பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஆகாஷ் மற்றும் 21 வயதான விஜய் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பிரதாப் குத்தியதில் படுகாயமடைந்த வணிக வளாக உரிமையாளர் தமிழரசு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழரசனுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது மூத்த மகள் மைதிலி உடன் தமிழரசன் வசித்து வருகிறார். ஏடிஎம்மில் கொள்ளையடிக்க வந்த இளைஞர்கள் தடுக்க வந்த 60 வயதான முதியவரை கொலை செய்துள்ள சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை பரபரப்பிற்கு மத்தியிலும் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடிக்க வந்த இளைஞர்கள் பயன்படுத்தியது எரிவாயு சிலிண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அதே ஏடிஎம் மையத்திற்கு எதிர்புறமாக உள்ள வெல்டிங் பட்டறையில் இருந்து எரிவாயு சிலிண்டர் காணாமல் போயுள்ளதாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சிலிண்டரை பயன்படுத்தி இந்த கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலிண்டரை பயன்படுத்தி கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவனாக திருவாரூர் முருகன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் உயிரிழந்து கடந்த சில மாதங்களில் ஆகியுள்ள நிலையில், அவனது பாணியில் சிலிண்டரை பயன்படுத்தி கொள்ளை முயற்சி நடந்திருப்பது காவல்துறையினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பிரபல கொள்ளையன் மறைந்த திருவாரூர் முருகனிடம் பயிற்சி பெற்றவர்கள் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.