பயிற்சியின்போது வீராங்கனைகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அண்மைக்காலமாகவே மாணவர்கள் ஆசிரியர்கள் மூலமாக சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது, இந்நிலையில் பள்ளியில் மட்டும் இல்லாமல் உடற்கல்வியிலும் வீரர்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் சம்பவம் வெளிவந்துள்ளது. சென்னை நந்தனத்தை சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன். இவர் ஜிஎஸ்டி அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனியாக ப்ரைம் ஸ்போர்ட்ஸ் என்னும் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


அண்மையில் இவர் நடத்திவரும் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தில் தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீராங்கனை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பூக்கடை காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இதனையடுத்து மே 28-ஆம் தேதி நாகராஜன் கைது செய்யப்பட்டு போக்சோ நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நாகராஜன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார், அந்த மனு போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது அதனை விசாரித்த நீதிபதியிடம் காவல்துறை தரப்பில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், முழுமையடையாத காரணத்தாலும் ஜாமீன் வழங்க கூடாது என முறையிட்டனர். இதனை ஏற்ற நீதிபதி முகமது பரூக் நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.