சூனியக்காரி எனக் கூறி அசாமில் 45 வயது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 


அஸ்ஸாமில் கோக்ரஜார் மாவட்டத்தில் வசித்துவந்தார் 45 வயது பெண் ஒருவர். அவர் சூனியம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக அவர் மீது கிராமமக்கள் புகார் கூறி வந்தனர்.


இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் அப்பெண்ணை காணவில்லை. உடனே அவரது கணவர் கிராமத் தலைவரிடம் புகார் கூறினார். கிராமத் தலைவர் அந்த நபரை அழைத்துக் கொண்டு கொசைகான் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் தெரிவித்தார்.


போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணைத் தேடி வந்தனர். அப்போது ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் பெண் சடலம் தொங்குவதை போலீஸார் கண்டுபிடித்தனர்.


உடனே காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் கூறிய நபரை வரவழைத்தனர். அவரிடம் சடலத்தை காட்டினர். அவர் அது காணாமல் போன தனது மனைவியே என்று கூறி அழுதார். உடனே அந்தப் பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தப் பெண்ணின் உடலில் காயம் இருந்ததால் அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் போலீஸார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். 4-வது நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.