காவல்நிலையத்தில் சிறுமி


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில், பிரச்சனை தீர்வுக்காக வரும் காவல்நிலையத்திலேயே ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் உள்ள கோக்ராபர் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலனை திருமணம் செய்ய வீட்டை விட்ட ஜூன் 21ஆம் தேதி வெளியேறியுள்ளார். அப்போது, காதலர்கள் இருவரையும் போலீசார் பிடித்து கோக்ராபுர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.


காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகு, அன்றைய இரவு முழுவதும் இருவரும் லாக் அப்பில் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது, அங்கு பணிபுரிந்த காவல் ஆய்வாளர் பிமான் ராய் சிறுமியிடம் முதலில் பேச்சுவார்த்தை கொடுத்துள்ளார். இதனை அடுத்து, அந்த சிறுமியை ஆபாச வார்த்தைகளால் பேசி, மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சிறுமியை மிரட்டி, ஆடைகளை களைய வைத்தும் நிர்வாணப்படுத்தியுள்ளார். 


பாலியல் தொந்தரவு


பின்னர், காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் மற்ற அதிகாரிகள் முன்பே சிறுமியை நிர்வாணமாக்கி அதனை புகைப்படமும் எடுத்துள்ளாக தெரிகிறது. மேலும், சிறுமியை அனைவரின் முன்பே பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.


புகாரின்பேரில், தலைமறைவாக உள்ள காவல் ஆய்வாளர் பீமான் ராயை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், பீமான் ராய் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், மாநில டிஜிபி ஜிபி சிங் உத்தரவின்பேரில் பீமான் ராய் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், பீமான் ராய் இருக்கும் இடம் பற்றி தகவல் கொடுப்பவருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அசாம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.






இந்த சம்பவம் குறித்து டிஜிபி ஜிபி சிங் கூறுகையில், ”ஹைதராபாத் எஸ்.வி.பி நேஷனல் போலீஸ் அகாடமியில் போலீஸ் பணியில் சேர்ந்தபோது, ​​காவல் நிலையம் என்பது அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு கோயில் என்றும் குடிமக்களுக்கு பாதுகாப்பான இடம் என்றும்  சொல்லி கொடுக்கப்பட்டது. இதுபோன்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது மிகவும் வேதனையடைய வைத்துள்ளது.  இதுபோன்று எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.