மும்பை சொகுசுக் கப்பல் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு அண்மையில் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. தன் மகனை ஜாமீனில் எடுப்பதற்காக இந்தியாவின் தலைசிறந்த குழுவாகக் கருதப்படும் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி குழுவின் வழக்கறிஞர்களில் ஒருவரான சதீஷ் மனேஷிண்டேதான் நீதிமன்றத்தில் வாதாடினார்.
அக்டோபர் முதல் வாரம் தொடங்கி நடந்த இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் தரப்படாமல் கீழ்மை நீதிமன்றங்கள் தொடர்ந்து இழுபறி செய்து வந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் குறித்துப் பேட்டியளித்துள்ள சதீஷ் மனேஷிண்டே கீழ்மை நீதிமன்றங்கள் இந்த வழக்கில் அலட்சியத்துடன் செயல்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அவர் கூறுகையில்,’கீழ்மை நீதிமன்றங்கள் நினைத்திருந்தால் இந்த வழக்கில் அக்டோபர் 2ந் தேதியே ஜாமீன் வழங்கியிருக்க முடியும்.ஆனால் அவர்கள் வழக்கின் தன்மையை ஒழுங்காக ஆய்வு செய்யவில்லை. அலட்சியம் செய்தனர். ஆர்யன் கான் அந்தக் கப்பலில் இருந்ததைத் தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை. அவர் போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாகவோ அவரிடம் கைப்பற்றப்பட்டதாகவோ எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இதையெல்லாம் கீழ்மை நீதிமன்றங்கள் கண்டுகொள்ளவில்லை.
ஷாரூக்கான் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் குழு என தான் கருதிய வழக்கறிஞரை இந்த வழக்கில் வாதிடுவதற்காக கேட்டுக்கொண்டார். ஆனால் ஷாரூக்கான் போன்ற வசதி வாய்ப்பு இந்தியாவில் எத்தனை பேருக்குக் கிடைக்கும். இப்படி கீழ்மை நீதிமன்றங்கள் செய்வதால் எத்தனை பேர் ஜாமீன் பெறமுடியாமல் சிறையில் தவிக்கின்றனர் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் சுமார் 25 நாள்களுக்கு முன், போதை மருந்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஆர்யன் கானுக்கு இந்த வழக்கில் ஷாரூக் கான் தரப்பில் இருந்து ஜாமீன் பெறுவதற்காகக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து ஜாமீன் அளிக்க மறுத்து வந்த நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனையடுத்து, நேற்று முன் தினமே சிறையில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதன், காரணமாக ஆர்யன் கானின் விடுதலை தாமதமானது.வழக்கில் வெளியிட்டுள்ள ஜாமீன் உத்தரவில் ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் போதை மருந்து தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், தனது பாஸ்போர்டைச் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதுஇந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சிறையில் அடைக்கப்பட்ட அர்பாஸ் மெர்சண்ட், முன்முன் தாமேச்சா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆர்யன் கானின் கைது குறித்து பல்வேறு பாலிவுட் கலைஞர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதுவரை நடிகர் ஷாரூக் கானோ, அவரது மனைவி கௌரி கானோ எந்தக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.