நடிகர் ஆர்யா சென்னை காவல் ஆணையரை திடீரென சந்தித்தது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் மன்னன், காதல் இளவரசன் வரிசையில் தமிழ்த் திரையுலகின் தீராத விளையாட்டுப் பிள்ளையை வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. இவருடைய திருமணத்துக்கு முன்னர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டுக் கல்யாணம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யா தமிழ்நாட்டு இளம் பெண்கள் மனங்களைக் கொள்ளையடித்தார். இளம் பெண்கள் சுயம்வரம் போல் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை இம்ப்ரஸ் பண்ண அவர்கள் மேற்கொண்ட பிரயத்தனம் பல கண்டனக் குரல்களையும் பெற்றது. பெண்கள் என்ன கடை சரக்கா? என்ற கோஷங்கள் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போட்டியில் பங்கேற்ற பெண்கள் வேண்டி, விரும்பி தங்களை போகப்பொருளாக பறைசாற்றிக் கொண்டிருந்தனர்.
கடைசி எபிஸோடில் யாராவது ஒரு பெண்ணை தனது இணையாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் கல்தா கொடுத்தார் ஆர்யா. பின்னர், வெயிட்டாக பாலிவுட் பக்கமிருந்து வந்த சாயிஷா ஷேகலை கரம் பிடித்தார். தம்பதிக்கு அண்மையில் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் தான் ஜெர்மனி பெண்ணின் புகார் புயலைக் கிளப்பியது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெர்மனி பெண் விட்ஜா. ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகார் செய்தி ஊடகங்களில் பரபரப்பைக் கிளப்ப அத்தனை சந்தேகக் கண்களும் ஆர்யா பக்கம் திரும்பியது. ஆனால்,அந்த வழக்கில் திடீர் திருப்பமாக முகமது அர்மான், முகமது ஹூசைன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தாங்கள் தான் விட்ஜாவிடம் ஆர்யாவைப் போல் பேசி பணம் பறித்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வழக்கில் ஆர்யாவிற்குத் தொடர்பில்லை எனக் கூறி சைபர் க்ரைம் போலீஸார் தகவல் தெரிவித்தனர். ஆர்யாவிற்கு தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று ஜெர்மனி பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது நடிகர் ஆர்யா மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார் பெயர் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், எனவே அவர்களை கைது செய்யவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் விட்ஜா விடாப்பிடியாக நிற்கிறார்.
இந்நிலையில் நடிகர் ஆர்யா நேற்று பிற்பகல் 2.35மணி முதல் 2.55 மணிவரை காவல்ஆணையரை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.