திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த உள்ள சீனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் வயது (55), இவர் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமார் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து மாணவி அழுதுக்கொண்டே பள்ளியில் நடந்த சம்பவத்தை மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் சென்று மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் காளியப்பனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு மாணவியின் பெற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் காளியப்பன், மாணவிகளிடம் பாலியல் தூண்டுதலில் ஈடுபட்டதாக கூறி போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காளியப்பனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் தலைமை ஆசிரியர் காளியப்பன் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் கடந்த 2 மாதங்களாக இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக சென்று வந்துள்ளார். இதனால் காளியப்பன், குடும்பத்தினரிடம் நான் செய்யாத தவறுக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
நான் ஒரு சில ஆண்டுகளில் ஓய்வு பெறும் நிலையில் இப்படி நடந்துள்ளது எனக்கு மிகவும் மன வேதனையாகவும், வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறி குடும்பத்தினரிடமும் மற்றும் உறவினர்களிடமும் கூறி உள்ளார். இந்த நிலையில் காளியப்பன் வீட்டின் மேல்மாடியில் உள்ள அவருடைய அறையில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். உடனடியாக அவருடைய குடும்பத்தினர் தலைமை ஆசிரியர் காளியப்பனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தலைமை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மனைவி விஜயா கடலாடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த காளியப்பனுக்கு 3 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060