Just In





அரியலூரை அதிர விட்ட ரயில் பயணி... என்ன விஷயம் தெரியுங்களா?
வினோத்குமாரை திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் வினேத்குமார் மீது ஹவாலா பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்தனர்.

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி வருமான வரித்துறை அலுவலர்கள், பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் பயணிகளிடம் தீவிர சோதனை
அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு திருச்சி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடன் அந்த பயணியின் கையில் இருந்த பையை வாங்கி ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். இதில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்ற பேருந்தில் கஞ்சா பறிமுதல்
77 லட்சம் ரூபாய் கொண்ட 500 ரூபாய் கட்டுகள்
தொடர்ந்து ரயில் நிலைய போலீசார் அந்த பயணியிடம் விசாரித்த போது அவர் பணம் எடுத்து வந்ததற்கான எந்த ஆவணங்களையும் காட்டவில்லை. பின்னர் ரயில்வே போலீசர் அந்த பணக்கட்டுகளை எண்ணி பார்த்தனர். இதில் அவர் சுமார் 77 லட்சம் ரூபாய் கொண்டு வந்துள்ளார். போலீசார் விசாரணையிலும் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் ரயில்வே போலீசார் உடனடியாக திருச்சி வருமான வரித்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். திருச்சி வருமான வரித்துறை இணை இயக்குனர் ஸ்வேதா தலைமையிலான அதிகாரிகள், அரியலூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சோள வியாபாரம் நடத்துவதாக தெரிவித்தார்
விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் என்பது தெரிய வந்தது. வினோத்குமார் தான் சோள வியாபாரத்தை நடத்துவதாகவும், அதற்கான பணத்தை எடுத்து வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கூறினாராம். ஆனால், இதற்கான எந்தவொரு ஆவணங்களும் அவர் கையில் இல்லை. மேற்கொண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், இந்த பணம் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பானது என்று தெரியவந்தது.
இதையும் படிங்க: காதலை கைவிட நினைத்த காதலன்.. காதலி செய்த சம்பவத்தால் அதிர்ந்த குடும்பம் - என்ன நடந்தது?
ஹவாலா பணம் என விசாரணையில் தகவல்
இதையடுத்து வினோத்குமாரை திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் வினேத்குமார் மீது ஹவாலா பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்தனர். மேலும் வினோத்குமாரிடம் இருந்து 77,11,640 ரூபாயை திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அரியலூர் ரயில் நிலையம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.