தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, மீண்டும் 64 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. தங்கத்தின் விலை குறையும்போது குறைந்த அளவிலும், அதிகரிக்கும் போது அதிக அளவிலும் இருப்பது, அநியாயமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.


ஒரு வாரத்தில் ரூ.1000 குறைந்த தங்கம் விலை


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி சவரனுக்கு உச்சபட்ட விலையான 64,600 ரூபாய்கு சென்றது. அதன் பின்னர் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்தது. 26-ம் தேதி சவரனுக்கு 200 ரூபாயும், 27-ம் தேதி சவரனுக்கு 320 ரூபாயும், 28-ம் தேதி சவரனுக்கு 400 ரூபாயும், மார்ச் 1ம் தேதி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 63,520 ரூபாயாக விற்பனையானது. அதன் பின்னர் அதே விலையில் நீடித்து வந்தது. இதன் மூலம், கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்தது.


மீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை


இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 560 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 70 ரூயாய் அதிகரித்து, ஒரு கிராம் மீண்டும் 8,000 ரூபாயை தாண்டி, 8,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் மீண்டும் 64,000 ரூபாயை கடந்து 64,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலையும் அதிகரிப்பு


இதேபோல், வெள்ளி விலையும் இன்று ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெள்ளியும் அதன் உச்ச விலையாக கிராமிற்கு 108 ரூபாயை தொட்டது. அதன் பின்னர், 26, 27-ம் தேதிகளில் 2 ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து 28, மார்ச் 1,2 தேதிகளில் மேலும் ஒரு ரூபாய் குறைந்து, 105 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று(03.03.25) ஒரு ரூபாய் உயர்ந்து 106 ரூபாய்க்கு வந்த வெள்ளியின் விலை, இன்று கிராமிற்கு மேலும் ஒரு ரூபாய் உயர்ந்து 107 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி, 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.


தங்கம் விலை ஏற்றம் குறித்து ஆதங்கப்படும் பொதுமக்கள்


கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இதில் மக்கள் வருந்தும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு வாரத்தில் வெறும் 1000 ரூபாய் மட்டுமே குறைந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் அதில் 56 சதவீதம், அதாவது 560 ரூபாய் உயந்துள்ளது அநியாயமாக உள்ளதாக கருதுகின்றனர். 


தங்கத்தின் விலையை குறைக்கும்போது சொற்ப அளவில் குறைப்பவர்கள், அதிகரிக்கும்போது மட்டும் பெரிய அளவில் அதிகரிக்கிறார்கள் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அவர்களது இந்த ஆதங்கமும், வேதனையும், தங்கத்தின் விலையை நிர்ணயிப்பவர்களின் கவனத்திற்கு செல்லுமா.?