திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த உள்ள சேவூர் கிராம பகுதியில் தனியார் லாட்ஜ் வளாகத்தில் புதியதாக தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று,  கடந்த 6ம் தேதி எந்தவித விளம்பரம் இன்றி தொடங்கப்பட்டது.  பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்களகை் கூறி டெபாசிட் தொகை வசூலிக்க கூடாது என்றும்,  எந்த ஒரு நிறுவனமும் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள வருவாய் துறை மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று கிளைகள் தொடங்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளது. ஆனால் சேவூர் கிராமத்தில் துவங்கப்பட்ட அந்த நிறுவனம், ஒரு கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது.


அதன்படி 1லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 36 ஆயிம் ரூபாய் வட்டி வழங்குவதாகவும்,  தொடர்ந்து 12 மாதம் வழங்கப்படும் என்றும், மேலும் 2 தங்க காசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் டெபாசிட் செய்த பணத்திற்கான ஆவணம் புதுப்பித்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 


 




 


மேலும், அந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில் கிளைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்த திட்டத்தால், அலுவலகம் திறந்த ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்கள் சுமார் 125க்கும் மேற்பட்டோர் தங்களின் பணத்தை டெபாசிட் செய்துள்ளதாக தெரிகிறது. ‛சதுரங்க வேட்டை படம் பாணியில் பணம் பறிக்க வேண்டுமென்றால் ஆசையை தூண்ட வேண்டும் என்ற பாணியில், இந்த நிறுவனம் திறக்கபட்டுள்ளதாக,’ சமூக வளைதலங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து, ஆரணி வருவாய் துறை தாசில்தார் பெருமாள்,  ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அரசிடம் அனுமதி பெறப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளனர்.


விசாரணைக்குப் பின், அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்குமாறு கூறி, ஒரு நாள் அவகாசம் கொடுத்து அங்கிருந்து புறப்பட்டனர். விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம், ஆசை வார்த்தையை நம்பி பொதுமக்கள் பலரும் அங்கு குவிந்து வருகின்றனர். விவகாரம் பெரிதானதால், அங்கு வரும் மக்களிடம், ‛திட்டம் முடிந்து விட்டது; அடுத்த திட்டம் வரும் போது அறிவிக்கிறோம்’ என்று கூறி, நிறுவன ஊழியர்கள் அவர்களை அனுப்பி வைத்தனர்.


முதலீட்டு நிறுவனத்தின் மீதான சந்தேகப்பார்வை நீண்டு வருவதால், இந்த விவகாரத்தை ஆழ்ந்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனம் குறித்து பரவலான விசாரணை நடத்தவும், வேறு எங்கும் புகார்கள் பெறப்பட்டுள்ளதா என்று அறியவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.