உத்தரப் பிரதேசம், நொய்டா, ஹைட் பார்க் குடியிருப்பு சொசைட்டியில், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு வெவ்வேறு நபர்களை ஆதரித்த இரு பிரிவினருக்குள் நேற்று மோதல் வெடித்தது.
இந்த மோதலில் 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு அப்பாட்ர்மெட்ண்ட் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தின்போது பெண் பாதுகாவலரின் முடியை இழுத்து குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் சண்டையிடும் வீடியோ வைரலாகி உள்ளது.
இந்தக் குடியிருப்பு சங்கத் தேர்தலில் ஏற்கனவே பொறுப்பு வகித்தவர்களே மீண்டும் தேர்வு செய்யப்பட்டதால் மோதல் வெடித்ததாகவும், இதனை அடுத்து குடியிருப்பு சங்கத்தின் பொதுக்குழு நடைபெற்ற இடத்துக்கு வெளியே அப்பார்ட்மெண்ட்வாசிகள் போராட்டம் செய்ததாகவும், இதனைத் தடுக்க வந்த பாதுகாவலர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நொய்டா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் குடியிருப்போர் நல சங்கத்தின் பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேசம், நொய்டாவின் செக்டர் 121இல் உள்ள அஜ்னாரா ஹோம்ஸ் குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலானது. இந்த வீடியோவில் பாதுகாவலரை இரண்டு பெண்கள் மிரட்டும் காட்சி பதிவாகியுள்ளது. முதலில் ஒரு பெண் வீடியோவில் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென்று அவர் காவலரின் காலரைப் பிடித்து இழுத்தும், அவர் அணிந்திருந்த தொப்பியைத் தள்ளி விட்டும் மோசமாக நடந்து கொள்கிறார்.
சுற்றி காவலர்கள், பாதுகாவலர்கள் என சிலர் சூழ்ந்திருக்கும் நிலையில், இப்பெண்கள் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் பாதுகாவலரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்துக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -