அண்ணா பல்கலைக்கழக்கத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய சம்பவத்தில் தனியார் அமைப்பைச் சேர்ந்த ஹரீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், நடன மாஸ்டர் சாண்டி, ஸ்டாண்ட் அப் காமெடியன் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் பட்டம் ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்
ஆனால் நிகழ்ச்சிக்கு நேரில் வரமுடியாத நடிகர் வடிவேலுக்கு நேரில் சென்று கௌரவ டாக்டர் பட்டத்தை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையாக மாறியது. காரணம் பொதுவாக பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்பட வேண்டிய கௌரவ டாக்டர் பட்டம் தனியார் அமைப்பு பெயரில் வழங்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையில் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தொடங்கி, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுவது வரை அனைத்தும் மோசடியாக நடைபெற்றது தெரிய வந்தது.
இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகமும், ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகமும் போலீசில் புகாரளித்தனர். அதனடிப்படையில் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தனியார் அமைப்பின் இயக்குநர் ஹரிஷை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடிய நிலையில் ஆம்பூர் அருகே பதுங்கியிருந்த ஹரீஷ், இடைத்தரகர் கருப்பையா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.