இந்தியாவின் புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிக்கு நேர்ந்துள்ள சோகம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே நடுங்க வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளேயே வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தொடர்பே இல்லாத ஒரு நபர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் கொடூரம்:


இந்த விவகாரத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது ஞானசேகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஞானசேகரனுக்கு நிகரான ஒரு குற்றவாளியாக கருதப்படுபவர் அந்த மாணவியின் காதலன். 


ஏனென்றால் பாதிக்கப்பட்ட மாணவி தனது இரவு உணவை முடித்துவிட்டு, அந்த காதலனை தினசரி இரவு சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததை அதை வீடியோவாக எடுத்து மிரட்டியுள்ளார்.

உயிருக்கு பயந்து ஓடிய காதலன்:


அந்த வீடியோவை காட்டி அவர்கள் இருவரையும் மிரட்டியுள்ளார். அந்த வீடியோவை அழித்துவிடும்படி அவர்கள் இருவரும் ஞானசேகரனிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரையும் மிரட்டிய ஞானசேகரன், அந்த காதலனை அங்கிருந்து ஓடிவிடு உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.


அந்த பெண்ணை அதே இடத்தில் விட்டுவிட்டு ஓடிவிடு என்று ஞானசேகரன் மிரட்டியதும், அந்த காதலன் செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளார். இறுதியில் அந்த பெண்ணை அதே இடத்தில் விட்டுவிட்டு அந்த மாணவன் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டான். பின்னர், தனிமையில் சிக்கிக் கொண்ட அந்த கல்லூரி மாணவியை ஞானசேகரன் சிதைத்துள்ளார். 


உயிருக்குப் பயந்து ஓடிய மாணவன் முதலில் ஓடிச்சென்றது மன்னிக்கவே முடியாத குற்றம் ஆகும். தன்னை நம்பி வந்த பெண்ணை எந்தவாெரு இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டியது காதலனின் அடிப்படை கடமை ஆகும். காதலனாக மட்டுமின்றி ஒரு ஆணின் அடிப்படை கடமை ஆகும். சந்தோஷத்தைக் காட்டிலும் கஷ்டத்திலும், ஆபத்திலும் துணை நிற்பதே காதலின் அடிப்படை ஆகும்.

காதலின் அடிப்படை என்ன?


ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்பது அடிப்படையான ஒன்றாகும். அதுவும் இந்த சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு பெண் எப்படியும் அடுத்து பாலியல் வன்கொடுமையே எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும் என்று தெரிந்தும், அந்த மாணவியை அந்த மாணவர் விட்டுச்சென்றது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். 


அப்படி உயிருக்குப் பயந்து ஓடிய மாணவர் உடனடியாக அருகில் இருந்த காவலர்களையோ, சக நண்பர்களையோ உதவிக்கு அழைத்து இருந்தால் கண்டிப்பாக அந்த மாணவியை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அந்த காதலன் அந்த மாணவியை காப்பாற்ற எந்தவொரு முயற்சியும் எடுக்காததே கிட்டத்தட்ட ஞானசேகரன் செய்த கொடூரத்திற்கு பக்கபலமாக அமைந்துவிட்டது. 


தனது குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, குடும்பத்தைச் சாராதவராக இருந்தாலும் சரி எந்தவொரு பெண்ணும் எந்தவொரு இடத்திலும் பாலியல் ரீதியாக தொல்லையை எதிர்கொண்டால் கண்டிப்பாக அதை எதிர்த்துக் கேட்க வேண்டியது ஒவ்வொரு ஆண்மகனின் கடமை ஆகும். அதுவே வீரமும், ஆண்மையும் ஆகும்.

ஆலோசனையும், பாதுகாப்பும் தேவை:


தற்போது பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனக்கு பாலியல் தொல்லை அளித்த அந்த ஞானசேகரனைக் காட்டிலும், இதுபோன்ற நெருக்கடியான சூழலில் யாரை நம்பிச்சென்றோமோ அந்த காதலனே கைவிட்டுவிட்டான் என்பதே  அந்த மாணவிக்கு மனதளவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். அந்த மாணவிக்கு தக்க உளவியல் ஆலோசனையும், இந்த சம்பவத்தால் அந்த மாணவியின் எதிர்கால கல்வி துளியளவும் பாதிக்காத வகையிலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.