இந்தியாவின் தேசிய விலங்கு புலி. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் புலிகள் இறப்பு தொடர் கதையாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறது. மேலும், புலி பாதுகாக்க வேண்டிய உயிரினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மின்சாரம் பாய்ந்து இறந்து போன புலியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களை அம்மாநில வனத்துறையினர் கைது செய்து வருகின்றனர். 


ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி எர்ரகொண்டபாலம் வனச்சரக அலுவலர் நீலகண்டேஸ்வர ரெட்டி தலைமையில் வன ஊழியர்கள் அக்கிராமத்தில் புலியின் கால் தடங்களை கண்டனர். இதையடுத்து கிராம மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு புலியின் இருப்பிடத்தைக் கண்டறிய அன்றைய தினமே ட்ராப் கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் புலிகள் நடமாட்டம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி, யாரும் வெளியில் தூங்க வேண்டாம், தனியாக யாரும் வெளியே செல்ல வேண்டும். புலி குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் என்று அறிவுறுத்தப்பட்டது. 


இந்தநிலையில், விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க, சட்டத்திற்கு எதிராக ஆக்கப்பள்ளம் கிராம மக்கள் தங்களது நிலங்களில் மின்சார வேலி அமைந்திருந்தன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு, வனத்துறையினர் புலியை கண்டுபிடிப்பதற்கு முன்பு அந்த புலி மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. இதையடுத்து, அந்த கிராம மக்கள் புலியை கறியை பங்குப்போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளனர். மேலும், கறியை பங்கு போடுவதில் சண்டையும் ஏற்பட்டுள்ளது. 


தொடர்ந்து, புலி நகங்கள் மற்றும் பல்லை எடுப்பதில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதையடுத்து, இந்த  விஷயம் வனத்துறையினருக்கு எட்டியுள்ளது. மேலும், புலி இறைச்சியை சமைத்தவர்கள் அதன் தோலை அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், புலி கறியை சாப்பிட்டவர்களாக சிலரை சந்தேகத்தின் பேரில் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றன. மூன்று நாட்களுக்கு முன், இருவரை, எர்ரகொண்டபாலத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து, ரகசியமாக விசாரித்ததாக தெரிகிறது. இதற்கிடையில், இரண்டு புலி குட்டிகள் பரிதாபமாக இறந்த தாயை தேடி அலைகின்றன. புலிக்குட்டிகள் தாயை தேடும்போது ட்ராப் கேமராவில் சிக்கியது.