ஆந்திராவில் உள்ள குஷமா ஹரந்தா கோவிலில் கடந்த நவம்பர் 26-ந் தேதி  சில பொருட்கள் திருடு போனதாக கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு வயதான முதியவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை அறிந்து போலீசார் கண்டுபிடித்தனர்.


பின்னர், செகந்தரபாத்தில் உள்ளது துக்காராம் கேட் பகுதியில் வசித்து வந்த அந்த முதியவர் வீட்டிற்கு நேரடியாக சென்ற போலீசார் அந்த முதியவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அங்கோத் ராமுலு நாயக் என்பதும், அவருக்கு 64 வயதாவதும் தெரியவந்தது. மேலும், அவரது வீட்டை பரிசோதனை செய்த போலீசாருக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.





அவரது வீட்டில் இருந்து கோவில்களில் பூஜைகளுக்கு பயன்படுத்தும் ஏராளமான வெள்ளிப் பொருட்களும், தங்கத்தால் செய்யப்பட்ட சில பொருட்களும் இருந்தது. இதையடுத்து, ராமுலு நாயக்கிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அவர் இந்த பொருட்களை எல்லாம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 18 கோவில்களில் திருடியதாக கூறியுள்ளார்.


தனது வயதைப் பயன்படுத்தி ஆன்மிக பயணம் என்ற பெயரில் கோவிலுக்கு செல்லும் அவர், அந்தந்த கோவில்களில் முதலில் ஒரு வாரம் தங்குவாராம். பின்னர், இரவு நேரத்தில் தான் திருடிய பொருட்களுடன் கோவில்களில் இருந்து தப்பிவிடுவதாகவும் கூறியுள்ளார். ஆந்திராவில் உள்ள 17 கோவில்களிலும், தெலுங்கானாவில் உள்ள 1 கோவிலிலும் இதுவரை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.




ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 3 கோவில்கள், குண்டூர் மாவட்டத்தில் உள்ள 10 கோவில்கள், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 3 கோவில்கள், பிரகாசம் மற்றும் மிராயலகுடா மாவட்டங்களில் தலா ஒரு கோவில்களிலும் கைவரிசையை காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அவர் கோவில்களில் இருந்து திருடிய 80.26 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்களையும், 225 கிராம் தங்க பொருட்களையும் போலீசார் மீட்டனர். 64 வயதான முதியவர் ஆந்திராவில் உள்ள 17 கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண