நாட்டில் சமீபகாலமாக மனிதர்கள் மீது மனிதர்களே நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறுநீரை குடிக்குமாறு வற்புறுத்துவது போன்ற சம்பவங்கள் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி வருகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீதுதான் இந்த மனிதாபிமானமற்ற செயல் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது ஆந்திராவில் இதேபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
காவல் நிலையத்தில் பட்டியலின இளைஞர்:
ஆந்திராவில் அமைந்துள்ளது கிழக்கு கோதாவரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது சாகல்லு மண்டல் பகுதி. இந்த பகுதியில் உள்ள குங்குடுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட பிரசாத். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 23. இந்த கிராமமானது கடியம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், இந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் முதல் மாயமாகியுள்ளதாக வழக்கு ஒன்று கடியம் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்கூட்டி ஒன்றை வெங்கடபிரசாத்தான் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, வெங்கட பிரசாத்தை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுநீரை குடி:
அங்கு வெங்கடபிரசாத்தை காவல் நிலையத்தில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சிவாஜி மிருகத்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், கடும் காயமடைந்த வெங்கட பிரசாத் தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு காவல் உதவி ஆய்வாளர் தண்ணீருக்கு பதிலாக சிறுநீரை குடிக்கச் சொல்லி சரமாரியாக திட்டி, தாக்கியுள்ளார்.
இதுதொடர்பாக, வெங்கட பிரசாத் கூறியிருப்பதாவது, எனது கைகள், கால்கள் மற்றும் முகத்தில் கடுமையாக தாக்கினர். நான் சுயநினைவின்றி விழுந்துவிட்டேன். ஆனால், போலீசார் என்னை நடிக்கிறியா? என்று கேட்டனர். காவல் உதவி ஆய்வாளர் என்னை எழுப்பி மீண்டும் அடித்தார். நான் மிகவும் பலவீனம் ஆனதைத் தொடர்ந்து, என்னை ராஜமகேந்திரவரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
போலீஸ் விசாரணை:
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் சரமாரியாக தாக்கப்பட்டதுடன், சிறுநீர் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராஜமகேந்திவரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜனி வெங்கட பிரசாத்தை நேரில் சென்று பார்த்து விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கினார்.
வெங்கடபிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சிவாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தற்போது பணியிடமாற்றம் செய்துள்ளனர். வட இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழங்குடியின இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கச் சொல்லிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சட்டத்தின்படி நடக்க வேண்டிய காவல்துறை உதவி ஆய்வாளரே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட இளைஞரை அடித்து உதைத்ததுடன் சிறுநீரை குடி என்று கூறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Crime: போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நகை பறித்த கும்பல் கைது ; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மேலும் படிக்க: Crime : காது குத்து விழாவுக்கு அழைத்து கொலை.. உறவினரை அடித்துக்கொன்ற நபர்.. மூவர் கைது