சமீபகாலமாக, விமான நிலையங்கள் மூலம் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வந்துள்ளது. தங்கம் மட்டும் இன்றி, போதை பொருள்கள், அரிய வகை விலங்குகள், மதிப்புமிக்க ஆபரணங்கள் ஆகியவை கடத்தப்படும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


கடத்தலில் ஈடுபட்ட விமான நிறுவனத்தின் அதிகாரி:


இந்த சூழ்நிலையில், தங்க கடத்தலில் விமான நிறுவன அதிகாரியே ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் கடத்தியதற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அதிகாரி கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


1,487 கிராம் தங்கத்துடன் வயநாட்டைச் சேர்ந்த ஷாபி என்பவரை கொச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பஹ்ரைன்-கோழிக்கோடு-கொச்சிக்கு இடையே இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரியான ஷாபி, தங்கம் கொண்டு வருவதாக சுங்கத்துறை ஆணையரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


ஸ்லீவில் மறைத்து வைத்து கடத்த முயற்சி:


இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் தங்கத்தை கைகளில் சுற்றிக்கொண்டு, சட்டையின் ஸ்லீவில் மறைத்து சோதனை செய்யும் இடத்தை தாண்டி செல்ல திட்டமிட்டிருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது"


சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டது குறித்து தகவல் கூறிய சுங்கத்துறை அதிகாரிகள், "3.32 கோடி மதிப்பிலான 6.8 கிலோ எடையுள்ள தங்கத்துடன் சிங்கப்பூரில் இருந்து வந்த இரண்டு பயணிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். AI-347 மற்றும் 6E-52 மூலம் சிங்கப்பூரில் இருந்து பயணிகள் சென்னை வந்தனர்" 


ட்விட்டர் பக்கத்தில் சென்னை சுங்கத்துறை வெளியிட்ட தகவலில், "உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், AI-347 மற்றும் 6E-52 மூலம் சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பயணிகள், நேற்று முன்தினம் சுங்கத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 


அவர்கள் கொண்டு வந்த பொருள்களை சோதனை செய்ததில், மொத்தம் 3.32 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.8 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. பயணிகள் கைது செய்யப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


டெல்லியில் கடத்தல்:


கடந்த மே 5ஆம் தேதி, இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் உள்ள சர்வதேச விமானத்தின் கழிவறையில் இருந்து சுமார் 2 கோடி மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.


இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், உள்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு வந்திறங்கிய விமானத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின்போது, கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த தொட்டியின் கீழே இருந்த சாம்பல் நிற பையை சுங்க அதிகாரிகள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது