இணையத்தில் அவ்வப்போது பகிரப்படும் சுவாரசியமான பதிவுகள் படுவைரலாக மாறுவது வழக்கம் அந்த வகையில் அண்மையில் ஒரு விளம்பரம் வைரலாக அனைவராலும் பகிரப்பட்டது. அமுல் அதன் தனித்துவமான விளம்பரங்களுக்கு பெயர் போன பிராண்ட். ஒவ்வொரு அரசியல் நிகழ்வுக்கும் தனது கார்ட்டூன் படங்களால் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட பிராண்ட் இது.  தவிர, அமுல் தனது வார்த்தை விளையாட்டுகளுக்குப் பெயர்போன பிராண்ட். ஒவ்வொரு முறையும், அதன் தயாரிப்புகளுக்கு கவர்ச்சிகரமான டேக்லைன்களையும் பெயர்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.





அந்த வகையில் தான் 'தாசா'  என்கிற பிராண்டும் உருவாக்கப்பட்டது. இந்தி வார்த்தையான ‘தாசா’ என்றால் ஆங்கிலத்தில் 'புத்துணர்ச்சி' என்று பொருள். அமுல் தாசா நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் பதப்படுத்தப்பட்ட பால் ரகம். 


பால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் கெடாமல் வைத்துச் சாப்பிட விரும்பும் நபர்கள் இந்த வகைப் பாலை வாங்குவார்கள். ஆனால் பேக்கேஜிங்கின் பின்புறத்தை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சமீபத்தில், ஒரு நபர் இந்த அட்டைப்பெட்டியின் பின்பக்கத்தை படம்பிடித்துப் பகிர்ந்திருந்தார். அமுல் தாசா உண்மையில் புத்துணர்ச்சியான பால் இல்லை என்பதை அது குறிப்பிடுவதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். 


இந்த இடுகை சிறிது நேரத்தில் ட்விட்டரில் கவனத்தை ஈர்த்தது, கிட்டத்தட்ட 42 ஆயிரம் பார்வையாளர்கள் இதனைப் பகிர்ந்திருந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கான பேர் இதில் கருத்து தெரிவித்திருந்தனர். 






அந்த பேக்கேஜில் அந்தப் பாலை எப்படிச் சேமிக்க வேண்டும், தட்பவெப்பநிலை என்ன இருக்க வேண்டும் என்கிற விவரங்களைக் குறிப்பிட்டிருந்த அமுல் குறிப்பாக தனது பிராண்டின் பெயரைக் குறித்து விளக்கி இருந்தது. அதில், “இதில் தாசா என்பது வெறும் பெயர்தானே தவிர பிராண்டின் உண்மைத்தன்மையை குறிப்பிடுவது அல்ல” எனக் குறிப்பிட்டிருந்தது.





பால் வாங்குபவர்கள் அதன் புத்துணர்ச்சிக்காகத்தான் வாங்குவார்கள் ஆனால் அதில் புத்துணர்ச்சி இல்லை எனக் குறிப்பிடுவது வாங்குபவர்கள் ஏமாற்றுவதாகும் என சிலர் அந்தப் பதிவில் கருத்து தெரிவித்திருந்தனர்.வேறு சிலர் டாடா பிரிட்டாணியா என அது போல இருக்கும் வேறு சில பிராண்ட்களின் தயாரிப்புகளைக் குறித்தும் பகிர்ந்திருந்தனர்.