இந்திய அதிகாரிளுக்கு, அதானி தரப்பில் சுமார் 25 கோடி டாலர் லஞ்சமாக கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தொழிலதிபர் அதானி:


இந்திய அளவிலும் சரி, உலக அளவிலும் சரி டாப் பணக்காரர்களில் இருப்பவர்தான் அதானி. இந்நிலையில், இவர் லஞ்சம் ஊழலில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தொழிலளிபதரான அதானி மீது, ஏன் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதுவும் அமெரிக்கா நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஏன் குற்ற வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம். 


அமெரிக்காவில் வழக்கு ஏன்?


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நீதிமன்றத்தில், லஞ்சம் ஊழல் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றப்பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, “ அதானியின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்திற்காக, சுமார் பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அதானி தரப்பானது, இந்திய அதிகாரிகளுக்கு பணம் செலுத்த, அதாவது லஞ்சமாக கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறது.  


இதற்கான லஞ்சம் கொடுப்பதற்காக பணத்தை ஏற்பாடு செய்வதற்காக,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த உலக முதலீட்டாளர்களிடம் , போலியான அறிக்கைகள் மூலம் பணம் திரட்டும் முயற்சியில் அதானி தரப்பு ஈடுபட்டிருக்கிறது.  இதற்காக, இந்திய அதிகாரிகளை, அதானி நேரில் சந்தித்ததாகவும், சுமார் 25 கோடி டாலர் லஞ்சமாக கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது , உலக முதலீட்டாளர்களிடம் பொய்யான தகவலை கூறி, பணம் பெற்றது தொடர்பாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 


இதுதான், அதானி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் , குற்றவழக்கு பதிவு செய்வதற்கான காரணமாகும்.




அதானி தரப்பு: 


இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதானி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது , “ எங்கள் மீதான குற்றச்சாட்டுகளானது ஆதாரமற்றவை. அமெரிக்க நீதித்துறை தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதிதான். இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.


சரிந்த அதானி சொத்துக்கள்:


மேலும், தங்கள் பங்குகளை வைத்திருப்பவர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களிடம் சட்டரீதியாக ஒத்துழைப்பு தருவதாகவும் அதானி தர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், மேலும், தற்போது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டானது அதானிக்கு பெரும் சரிவை  ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இன்றைய பங்குச் சந்தையில் துறைமுகம், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய அதானி குழுமத்தின் பங்குகள் 10 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. இது , அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்கு பெரும்  கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில்,  அதானி நிறுவனத்திற்காக ஒப்பந்தம் வழங்க இந்திய அதிகாரிகளுக்கு ,லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த தருணத்தில், அதானியை கைது செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி , அவரை பாதுகாக்கிறார் என்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


Also Read: அமெரிக்கா டூ தமிழ்நாடு.. அதானியை சுற்றும் லஞ்ச புகார்.. FBI அதிகாரிகளின் ஸ்கெட்ச்!