இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கெளதம் அதானி மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க ஒழுங்காற்று வாரியம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, இந்தியா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு, 250 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாக அதானி மீது அமெரிக்கா குற்றம் சாட்டி இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்த போதிலும், இந்திய பங்குச்சந்தையில் இதன் விளைவுகளை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதானி பங்குகள் கடும் சரிவை சந்தித்திருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், சர்ச்சைக்குரிய சோலார் எனர்ஜி ஒப்பந்தம் எப்போது போடப்பட்டுள்ளது, அதில் அதானி குழுமம் எப்போது நுழைந்தது, அதிகாரிகளுக்கு எப்படி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
2019ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்: இந்திய அரசுக்கு சொந்தமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI), அதானி கிரீன் எனர்ஜியிடமிருந்து 8 ஜிகாவாட் (GW) சூரிய சக்தியையும், அஸூர் பவர் குளோபல் நிறுவனத்திடம் இருந்து 4 GW சூரிய சக்தியையும் வாங்க ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 12 GW சூரிய சக்தியை வாங்கும் மாநில மின்சார விநியோக நிறுவனங்களை சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) கண்டறிய வேண்டிருந்தது.
2020ஆம் ஆண்டு: எரிசக்தி விலை அதிகமாக இருந்ததால், அதை விற்பது SECIக்கு கடினமாக மாறியது. இது, முழுத் திட்டத்தையும் பெரும் சிக்கலில் தள்ளியது.
இந்த திட்டத்தைப் பாதுகாக்க, சாகர் மற்றும் பிற அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டம் ஒன்றை முன்வைத்தார் கௌதம் அதானி. அதன்படி, SECIயிடம் இருந்து சூரிய சக்தியை வாங்கும் நிறுவனங்களை கண்டறிய, இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை:
தென்னிந்தியாவில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் அடையாளம் தெரியாத இந்திய அதிகாரியை கவுதம் பலமுறை சந்தித்தாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரிக்கு 17.50 பில்லியன் ரூபாய் ($207.14 மில்லியன்) வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மின்சார விநியோக நிறுவனங்கள் 7 GW சூரிய சக்தியை வாங்க ஒப்புக்கொண்டன.
SECI இலிருந்து சூரிய சக்தியை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் ஈடுபட மற்ற மாநிலங்களில் உள்ள அதிகாரிகளுக்கு 2.79 பில்லியன் ரூபாயை வழங்குவதாகவும் அதானி உறுதியளித்தனர்.
கௌதம் அதானியின் மருமகனான சாகர் அதானி, தனது மொபைலில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய விவரங்களை சேகரித்து வைத்துள்ளார்.
ஜூலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரை: ஒடிசா, ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மின்சார நிறுவனங்கள், அஸூர் பவர் மற்றும் அதானி க்ரீன் எனர்ஜி ஆகியவற்றிலிருந்து மின்சாரம் வாங்கும் SECIஇலிருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தங்களில் நுழைந்தன.
ஏப்ரல், 2022: லஞ்ச பணத்தில் அஸூர் பவர் நிறுவனம் தர வேண்டிய 83 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பங்கினை தங்களுக்கு திருப்பி கொடுப்பது குறித்து பேச, அஸூர் பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித் குப்தா உள்ளிட்டோரை சந்திக்க கெளதம் அதானி திட்டமிடப்பட்டார்.
இதற்கிடையில், ரஞ்சித் குப்தாவையும் மற்றொரு நிர்வாகியையும் ராஜினாமா செய்யும்படி அசூர் நிறுவனம் கேட்டுக் கொண்டது. கௌதம், ஜெயின் மற்றும் சாகர் ஆகியோர் அஸூரின் ஆலோசகர் ரூபேஷ் அகர்வால் மற்றும் மற்றொரு நிர்வாகியைச் சந்தித்தனர். அப்போது, அதானி கிரீனுக்கு பணத்தை திருப்ப தருவது குறித்து அசூர் நிறுவனத்திற்கு பல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.
ஜூன், 2022: அஸூர் பவர் நிறுவனத்தின் நிர்வாகிகளும் அதானிகளும் SECIஇலிருந்து 2.3 GW மின் கொள்முதல் ஒப்பந்தங்களைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் பணம் செலுத்துவதற்கான வழிமுறையை இறுதி செய்தனர். பின்னர், அது ஒப்பந்தம் அதானி கிரீனுக்கு வழங்கப்பட திட்டமிட்டது.
மார்ச், 2023: F.B.I அதிகாரிகள் (அமெரிக்கா புலனாய்வுத்துறை) பிடி வாரண்டுடன் சென்று அமெரிக்காவில் உள்ள சாகரை பிடித்தனர். அவருடைய மின்னணு சாதனங்களைக் கைப்பற்றி, நீதிமன்றத்தில் சாட்சியமாக வருவதற்கான நோட்டீஸ் அவரிடம் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வரும் குற்றங்கள், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் அந்த நோட்டீஸில் இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்கள் கௌதம் அதானியிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
மார்ச், 2024: Azure Power நிறுவனத்திடம் இருந்து அதானி கிரீன் நிறுவனத்திற்கு 2.3 GW கொள்முதல் ஒப்பந்தங்களை மறு ஒதுக்கீடு செய்ய SECI அனுமதித்தது.