மானவா நாயக்:
ஹிந்தி மற்றும் மராத்தி மொழி படங்களில் நடித்து வருபவர் மானாவா நாயக். 2008 ஆம் ஆண்டி பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ஜோதா அக்பர் படத்தில் நீலாக்ஷி என்ற கதாப்பாத்திரத்தில் வருவார் மானவா. நடிகையாக மட்டுமன்றி இயக்குனராகவும் திரையுலகில் வலம் வரும் இவர், மராத்தி மொழியில் 2014ஆம் ஆண்டு வெளியான போர் பஸார் எனும் திரைப்படத்தை இயக்கி சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். காமெடி-த்ரில்லராக உருவான இப்படம் கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படங்களை இயக்குவது மற்றும் அவற்றில் நடிப்பது மட்டுமன்றி, சீரியல்களிலும் நடித்து வருகிறார் மானாவா. இவருக்கென்று, ரசிகர்களும் நிறைய பேர் உள்ளனர். இவரிடம் உபேர் கார் ஓட்டுநர் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளதாக ஃபேஸ் புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மானவாவின் ஃபேஸ்புக் பதிவு:
மானவா நாயக், நேற்று பந்தரா குர்லா காம்பளெக்ஸ் என்ற இடத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக 8.15 மணியளவில் கேப் புக் செய்துள்ளார். பயணத்தின் போது, காரின் ஓட்டுநர் செல்போனில் பேசியுள்ளார். அது மட்டுமன்றி, ட்ராஃபிக் சிக்னல்களில் நிற்காமல் சாலை விதிகளை மீறியும் சென்றுள்ளார். இதனால், அங்கிருந்த போக்குவரத்து காவலருக்கும் கார் ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மானவா போக்குவரத்து காவலரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு, , காரை ஓட்டி வந்த ஓட்டுநர் நடிகையை மரியாதை குறைவாக பேசி, 500 ரூபாய் அபராதம் செலுத்தும் படி அதிகார தோரணையில் கேட்டுள்ளார். அப்படி கட்டவில்லையெனில் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். அந்த இடத்திலிருந்து வண்டி நகர்ந்த பிறகு, காவல் நிலையத்தில் காரை நிறுத்துமாறு மானவா கூறியுள்ளார்.
ஆனால் அந்த ஓட்டுநரோ, காரை பந்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் பகுதியில் உள்ள ஒரு இருட்டான இடத்தில் நிறுத்தியுள்ளார். அதற்கடுத்து, பிரியதர்ஷினி பார்க் என்ற இடத்திற்கு செல்லும் சாலையில் அதிவேகமாக வண்டியை செலுத்தியுள்ளார். ஓட்டுநரின் இந்த செய்கையால் பயந்து போன நடிகை மானவா உபேர் ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்துள்ளார்.
அப்போது, முன்னைவிட அதிகமாக வண்டியின் ஸ்பீடை ரெய்ஸ் செய்துள்ளார் அந்த ஓட்டுநர். எவ்வளவு கூறியும் காரின் வேகத்தை அந்த ஓட்டுனர் குறைக்காததால் மானவா சாலையில் செல்பவர்களை கத்தி உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து பைக் மட்டும் ஆட்டோவில் வந்த இரண்டு பேர் வண்டியை நிறுத்தி நடிகையை காரில் இருந்து பத்திரமாக இறக்கியுள்ளனர். “நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன்..ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது” என தனது ஃபேஸ் புக் பக்கத்தில் தனக்கு நேர்ந்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
காவல் துறை அதிகாரி பதில்:
நடிகையின் இப்பதிவை பார்த்த விஷ்வாஸ் நாங்ரே பட்டேல் என்ற காவல் துறை அதிகாரி, “இந்த சம்பவத்திற்கு காரணமானவரை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கமெண்ட் செய்துள்ளார். நடிகையின் இப்பதிவு வைரலாகி வருகிறது.