சென்னையைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா தற்போது பாஜகவில் உள்ளர். அலிஷா அப்துல்லா பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்தே கார்ட் எனப்படும் உள்ளரங்க ரேசிங் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். 13 வயதில் தேசிய அளவிலான உள்ளரங்க கார் பந்தையத்தில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகிறார்.
பாஜக பிரமுகர்
ரேசிங்கில் இந்தியாவிலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதர்வா நடித்த இரும்புக் குதிரை திரைப்படத்தில், சிறப்புத் தோற்றத்தில் பெண் பைக்கராக நடித்து இவர் அறிமுகம் கொடுத்தார். அதன் பின்னர் விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தில் இவர் நடித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு முதல் பாஜகாவில் இணைந்து கட்சிப்பணியாற்றி வருகிறார். தற்போது இவர் பாஜகவில் மாநில விளையாட்டு மேம்பாட்டுத்திறன், பிரிவு மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை தனியார் விடுதியில் பணி நிமித்தமாக அங்கு உள்ளார். அங்கு போதையில் ஒரு நபர் அவரிடம் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. போதையில் அத்துமீறி நடந்த நபரை பிடித்துக் கொடுத்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து வந்த அழைப்புகள்
அதே ஹோட்டலில் கடும் போதையிலிருந்த அந்த நபர் அலிஷாவிற்கு தொடர்ந்து செல்போன் மூலம் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார். தனது அறைக்கு வருமாறும், தனக்கு மசாஜ் செய்யுமாறும் அழைப்பு விடுத்து தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அலிஷா காவல்துறைக்கும், ஹோட்டல் ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்து விட்டு காத்திருந்துள்ளார். மணிக்கணக்கில் காத்திருந்தும் அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால் ஒரு முடிவுக்கு வந்த அலிஷா, அந்த போதை நபரை போலீசாரிடம் கையும் களவுமாக பிடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
பரபரப்பு குற்றச்சாட்டு
அதன்படி சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அவரே நீலாங்கரை போலீசாரிடம் இழுத்துச் சென்று ஒப்படைத்துள்ளார். அப்போது பேசிய அவர் போலீசாரிடம் புகார் கொடுக்க முயன்ற போது, வேறொரு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் அளிக்குமாறு போலீசார் கூறியதாக குற்றம்சாட்டினார். தன்னைப் போன்று தினமும் எத்தனை பெண்கள் இதைப் போன்ற பாலியல் தொல்லைகளை எதிர்கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், இவரைப் போன்ற போதை நபர்களால் தமிழகம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து போலீசார் அந்த போதை நபரை கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றனர். போதையில் நிலை தடுமாறியபடி இருந்த அந்த நபர் மீது அலிஷாவும் லேசான தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தால் ஓஎம்ஆர் தனியார் விடுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைதான நபர் ஊரப்பாக்கத்தை சேர்ந்த சரஸ் என்றும், அவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அலிஷா அப்துல்லா கூறுகையில், கேளம்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் அலைக்கழிக்கப்பட்டார்கள். நீலாங்கரை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நானே குற்றவாளியை திருப்பி கொடுத்தேன், அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.