உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் இரண்டு இளம் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் இன்று காலை என்கவுன்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச்சூட்டின்போது, அவரது வலது காலில் போலீசார் சுட்டனர்.






என்கவுன்டரில் காயமடைந்த குற்றம்சாட்டப்பட்டவரான ஜுனைத், இரண்டு காவல்துறை அலுவலர்களின் உதவியுடன் அவர்களை தாங்கி கொண்டு வயலுக்கு வெளியே நடந்து செல்வது வெளியான வீடியோவில் பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆறு பேரில் கடைசியாக கைதான ஜுனைத், சிறுமிகளுடன் நண்பர்களாக இருந்த இருவரில் ஒருவர் என்றும் அவர்களை மோட்டார் சைக்கிளில் வரச் செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 


சிறுமிகளுக்கு அப்படி எந்த நட்பும் இல்லை என்றும் அவர்கள் கடத்தப்பட்டதாகவும் சிறுமிகளின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். இவர்களது கிராமம் அருகே நேற்று மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், சிறுமியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.


இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் கூறுகையில், "சோட்டு என்ற நபர் அந்த சிறுமிகளை ஜுனைத் மற்றும் சோஹைலுக்கு அறிமுகப்படுத்தினார். சகோதரிகள் இருவரையும் நேற்று கரும்பு பண்ணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


தங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சிறுமிகள் கூறியதையடுத்து, அவர்கள் கோபமடைந்தனர். ஹபீசுலின் என்பவரின் உதவியுடன் சிறுமிகளை கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர், அவர்கள் கரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகியோரை அழைத்தனர். தற்கொலையை போல சித்தரிக்க சிறுமிகளை தூக்கிலிட்டுள்ளனர்.






பாதிக்கப்பட்டவர்களின் சுற்றுப்புறத்தைச் சேர்ந்தவர் சோட்டு. மற்ற ஐந்து பேர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆறு கைதுகளின் மூலம் சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிபட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சிறுமிகளின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.


சட்டம் ஒழுங்கு எப்படி சீர்குலைந்துள்ளது என்பதற்கு இந்த சமீபத்தில் சம்பவம் சான்றாக அமைந்துள்ளது என எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.