விதவிதமா பேசிக்கிட்டாங்க

 

சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த வருடம் துவக்கத்திலிருந்து "ஹாட் டாபிக்" இதுதான். அட 'இங்க பாருப்பா' ஒரு விளம்பர வந்திருக்கு, இந்த நிதி நிறுவனத்தில், ஒரு லட்ச ரூபாய்க்கு மாசம் மாசம் 30 ஆயிரம் ரூபா வரைக்கும் வட்டி கொடுக்கிறாங்க, நாமளும் இதில் முதலீடு பண்ணலாமா, என்பதுதான் பேசு பொருளாக இருந்து வந்தது. இது இங்க மட்டும் இல்லப்பா, பல்வேறு இடங்களில் நிறைய பேரு காசு போட்டு எடுத்து இருக்காங்களாம், நிறைய பேரு லட்சக்கணக்கில் முதலீடு பண்ணி சம்பாதிச்சு இருக்காங்களாம், இதுதான் "ஹைலைட்டான ஹாட் டாப்பி"க்காக பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்பேச்சு இப்போது முழுமையாக மாறியுள்ளது,  " நல்லவேளை நான் போடல " என்பதுதான். என்னதான் ஆனது அந்த நிறுவனத்திற்கு , இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.



 

குட்டி சதுரங்க வேட்டை

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், ஆருத்ரா என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் போட்டால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரும் என கவர்ச்சிகரமான விளம்பரத்தை பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகளை பொதுமக்களிடமிருந்து சுருட்டிக் கொண்டு சென்றது. இந்த வழக்கு தற்போது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் ரூ.2,438 மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன.

 



 

முக்கிய குற்றவாளிகள் கைது

 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஸ்கர், மோகன்பாபு, பட்டாபிராம் பேச்சு முத்துராஜ் (எ) ரபீக், ஐயப்பன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள முக்கிய குற்றவாளிகளான சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜசேகர், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஷ், விருதுநகர் முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த மைக்கேல் ராஜ், சென்னையை சேர்ந்த நாராயணி உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் லிமிடெட் நிறுவனத்தின் அரியலூர் மாவட்ட குமிழன்குழி பகுதியை சேர்ந்த முக்கிய ஏஜென்டான செந்தில்குமார் (34) என்பவரை நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜெயசந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.



 

அவரிடம் இருந்து 1 கோடியே 97 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர் அளித்த தகவலின்படி நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ரூ.7.95 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் செந்தில்குமாரிடம் இருந்து இதுவரை 2.57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது, எனவே பலர் கைது செய்து சொத்துக்கள் முடக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்